அம்ருத் திட்டப் பணிகளை முடித்து கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க கோத்தகிரி மக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரி நகர மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதற்காக துவங்கப்பட்ட அம்ருத் திட்டப் பணிகள் வரும் கோடைக் காலத்திற்குள் நிறைவு பெறுமா? என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஈளாடா தடுப்பணை உள்ளது. இது அடிக்கடி வறண்டு போவதால் கோடை காலத்தில் தொடர்ந்து குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து 2 முறை தடுப்பணை தூர்வாரப்பட்டு,பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்டு, அங்கிருந்து கோத்தகிரிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் கோத்தகிரி நகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொலைநோக்கு திட்டமாக அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சுமார் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பல்வேறு செயல்பாடு சிக்கல்களால் இந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் வகையில் அளக்கரை மற்றும் ஈளாடா ஆகிய 2 நீராதாரங்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்து, முறையாக விநியோகம் செய்வதற்காக ஒன்றிய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்படி ஈளாடா தடுப்பணை பகுதியில் இருந்து கோத்தகிரிக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி, தண்ணீரை சேகரித்து வைப்பதற்காக சக்திமலை பகுதியில் 2 நீர்த்தேக்க தொட்டிகள், இரண்டு நீர் உந்து நிலையங்களில் 2 தொட்டிகள், ஹோப்பார்க், தங்கமலை, லூக்ஸ் சர்ச் ஆகிய இடங்களில் தலா ஒரு தொட்டி என மொத்தம் 7 தொட்டிகள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 9 வார்டுகளை சேர்ந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குடிநீர் குழாய்களை நிலத்திற்கு அடியில் பதிக்கும் பணிகள் மற்றும் அந்த குழாய்களை தொட்டியுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவின்படி, நகராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் வசூலிப்பதற்காக, குடிநீர் குழாய்களில் முக்கிய சந்திப்பு பகுதியில் குடியிருப்புகளுக்கு செல்லும் குழாய்களில் கணக்கீட்டு மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குழாய்களை நிலத்தில் பதிக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் நகரின் முக்கிய சாலையோரங்கள் முழுவதும் குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் அவை தற்காலிகமாக மூடப்பட்டு, பல மாதங்களாகியும் சாலைகள் புதுபிக்கப்படாததால் பொதுமக்கள் நடந்து செல்லவும், அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.கோடை நேரத்தில் இந்த சாலைகள் புழுதி பறக்கும் நிலையிலும், மழை நேரத்தில் கால்வாய் போன்றும் காட்சியளிக்கின்றன.

எனவே கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், கோடை காலத்திற்குள் குடிநீர் விநியோக திட்டப் பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் புதுப்பிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: