*கிராம மக்கள் கோரிக்கை
காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மோவூர் கிராமத்தில் கால்நடை மருத்துமனையுடன் கூடிய மருந்தக கட்டிடம். 2017ம் ஆண்டு ரூ.90 லட்சம் செலவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள 5 கால்நடை மருந்தகங்களில் முக்கியமானதாக இது கருதப்படுகிறது. கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், குணவாசல், ம.ஆதனூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த வேளாண் தொழில் செய்துவரும் விவசாயிகளுக்கு பயன்பட்டு வருகிறது. அப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்களின் பிரதான தொழில் வேளாண் தொழிலாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த கட்டிடம் கிராம மக்களின் சேவைக்கு லாயக்கற்று பாழடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மருந்தகத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாமல் முட் புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.
இதனால் மழை காலங்களில் கால்நடைகளை சிகிச்சைக்காக கூட்டிச்செல்லும்போது கால்நடை மட்டுமல்லாது அதன் உரிமையாளர்களும் பல இன்னலுக்கு உள்ளாகின்றனர். கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி, கட்டிடத்தின் தரை பகுதி, மேற்கூரை, மருத்துவம் அளிக்கப்படும் கவணை பழுதடைந்துள்ளது. குறிப்பாக மின்சார வசதி இல்லாமல் காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கையில், மோவூர் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகிறது. கட்டிடம் கட்டப்பட்டு அடுத்த 2 வருடங்களில் பொதுப்பணித்துறையின் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து போனது.
அப்போதைய ஒப்பந்ததாரர்கள் சிமெண்ட்டுக்கு பதிலாக அதிக மணல் கலவையை கொட்டி பல லட்சம் வரை லாபம் பார்த்து சென்றுவிட்டனர்,இதில் தற்போது நாளென்றிற்கு 10 முதல் 30க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி விவசாயிகள் தங்களின் ஆடு, மாடுகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர்.
அப்படி வருபவர்கள் கால்நடைகளுக்கான தண்ணீர் வசதி, அவைகளை கட்டி வைப்பதற்காக தொழுவம் இல்லாத காரணத்தால் திறந்தவெளியில் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு நேரங்களில் ஆடு, மாடுகளுக்கு தேவையான குடி தண்ணீர், தீவனம் உள்ளிட்டவைகளை அளிக்க முடியாமல் திணறுகின்றனர்.சிகிச்சை அளிக்க வரும் மருத்துவருக்கும் குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையே தற்போதுவரை நீடிக்கிறது.
இதனால் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் பல விவசாயிகள் வெளியூர் சந்தைகளிலும் கசாப்பு கடைகளுக்கும் விற்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்கள் பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருந்தக கட்டிடத்தை நேரடியாக ஆய்வு செய்து கட்டிடத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
