போச்சம்பள்ளி அருகே கூட்ரோட்டில் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

*கண்டுகொள்ளாத அதிகாரிகள்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே கூட்டுரோடு சாலையில் பாதுகாப்பின்றி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து கல்லாவி, ஊத்தங்கரை, ஒலப்பட்டி, சாலமரத்துப்பட்டி, ஆனந்தூர், கேட், தாதம்பட்டி, மாவுத்தூர், புலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மெயின் சாலை வழியாக மற்றும் மேல்மருவத்தூர், மேல்மலையானூர், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லாவி சாலையான போச்சம்பள்ளி ராசி நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று வருகின்றன.

மேலும், அவ்வழியாக அரசு பள்ளிகள், மருத்துவமனை, நூலகம், தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளும் அதிகம் இருப்பதால் போக்குவரத்து மிகுதியாக காணப்படும்.

இந்நிலையில், மிகவும் முக்கியம் வாய்ந்த இச்சாலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் கோழி, மீன், இறைச்சி கழிவுகள் மற்றும் ஓட்டல் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை இரவு நேரத்தில் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அவ்வழியாக செல்வோர் மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. அதேபோல், குடியிருப்போர்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அரசு அதிகாரிகள் தினமும் இச்சாலை வழியாக சென்று வருகிறார்கள். ஆனால், கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் உள்ளனர்.

இந்நிலையில், சமீப காலமாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடிருப்புகள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனங்கள் மூலம் எடுத்து வந்து இரவு நேரத்தில் விவசாய நிலங்கள் மற்றும் மெயின் சாலையோரத்தில் கொட்டி வருகிறார்கள்.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையும் நிலவி வருகிறது. இதனால் கல்லாவி சாலையின் வழியாக(போச்சம்பள்ளி ராசி நகர் பகுதி) செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: