தென்காசி: தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றாலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு தவெக தனியாக இருக்கிறது என்று பல பேர் பாடி கொண்டிருக்கிறார்கள். தவெக தனியாக நிற்கவில்லை. மக்கள் இருக்கிறார்கள். தாய்மார்கள் இருக்கிறார்கள். வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் பசும்பொனில் சசிகலா ஒரு கட்சி தொடங்குகிறார். அதில் ஓபிஎஸ் இணைந்து அவரோடு பணியாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
திமுகவில் இணைவார் என்று வரக்கூடிய செய்தி நம்ப முடியாது. ஏனென்றால் மூன்று முறை முதல்வராக இருந்தவர். அதை தாண்டி ஒரு நீண்டகாலம் தமிழ்நாட்டு அரசியலில் பயணித்தவர். தன்னுடைய அந்திமக்காலத்தில் திமுகவில் இணைவதன் மூலம் அவர் இதுவரைக்கும் பெற்று வந்த பெருமையும் செல்வாக்கும் பெருமூச்சு வாங்கும். இதனால் அந்த முடிவை எடுக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். எனது தொகுதி பத்மநாபபுரம் அதில் விஜய் நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சசிகலா துவங்கும் கட்சி எங்களுடன் கூட்டணி வர வாய்ப்பில்லை என்று சொல்லமுடியாது. எங்களுடன் வரவேண்டும் என்று தாகமும் தவிப்பும் உள்ள கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார். அது இரண்டு நாளில் தெரியும் என்றார்.
