சென்னை: தெற்கு மற்றும் மின்சார ரயில் சேவைகள் திடீர் ரத்து செய்யப்பட்டதால் ரயிலை நம்பி பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகத்துக்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளுக்காக தெற்கு ரயில் சேவைகள் மற்றும் மின்சார ரயில் சேவைகளை திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்த திடீர் நடவடிக்கை காரணமாக பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். தினமும் ரயிலை நம்பி பயணம் செய்யும் அனைவரும், தேர்வு காலத்தில் மாணவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தெற்கு ரயில் சேவைகளும் மின்சார ரயில் சேவைகளும் முழுமையாக பராமரிப்பு பணிகள் என்ற காரணத்தால் நிறுத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே அறிவித்து மாற்றுத் பயணத் திட்டத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திடீரென்று ரயில்கள் ரத்து செய்வது முறையல்ல. “பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தற்காலிக அசவுகரியத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று பொதுமக்களை மட்டும் பொறுப்பேற்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு பதிலாக, ரயில்வே நிர்வாகம் என்ன மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க தெற்கு ரயில்வே நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, மாற்று போக்குவரத்து மற்றும் கூடுதல் ரயில் சேவை ஏற்பாடுகளை செய்து, பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
