ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, அதிமுகவில் சேர்க்க மாட்டேன் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததால், நேற்று புதுக்கட்சி துவங்குவதற்காகன் ஏற்பாடுகளில் சசிகலா ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தினார். நேற்று ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிற்கு சசிகலா வந்திருந்தார். அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பசும்பொன் அருகே கமுதி, மதுரை சாலையோரம் உள்ள கோட்டைமேடு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்திில் பங்கேற்றார். இதில் தென்மாவட்டங்களில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் சசிகலா பேசியதாவது: 1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு மூத்த அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் கட்சியை கைப்பற்றும்விதமாக இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதாவை தள்ளி விட்டு புறக்கணித்தனர். அன்று நான் எடுத்த முடிவால் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 எம்எல்ஏக்களுடன் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராகி, 3 முறை ஆட்சியையும் பிடித்தார். அதனை போன்றுதான் தற்போது எனக்கு நடந்து வருகிறது.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இறந்தபோது, என்னை முதல்வர் பதவி ஏற்க அப்போதைய அமைச்சர்கள் அழைத்தனர். நான் கட்சி தலைவியாக பார்க்காமல், உடன் பிறந்த சகோதரியாக பார்த்ததால் அந்த மனநிலையில் ஓபிஎஸ் முதலமைச்சராக இருக்கட்டும் என்றேன். அப்போது செங்கோட்டையனை மட்டும் அமைச்சராக சேர்க்க சொன்னேன். அதற்கு அடுத்து ஓபிஎஸ் போக்கு சரியில்லை என எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பிறகு ஓபிஎஸ், அனைத்து எம்எல்ஏக்களையும் வரவழைத்து கூட்டம் போட்டு விபரம் கேட்டேன். அப்போது, ஜெயலலிதாவிற்கு பிடிக்காத ஒரு போலீஸ் அதிகாரியை ஓபிஎஸ் நியமித்தார் என எம்எல்ஏக்கள் கூறினர்.
அதன்பிறகு என்னை பொதுச்செயலாளராக இருக்கவும், முதலமைச்சராக இருக்கவும் எம்எல்ஏக்கள் சொல்லி நாள் ஒன்றிற்கு 3 முறை வந்து என்னை வற்புறுத்தினர். அதன்பிறகு இப்போது மேலிடத்தில் உள்ளவர்கள்(பாஜ) பேச்சைக் கேட்டு தர்மயுத்தம் நடத்தினார். அதற்கு பிறகு பதவி ஏற்ற கவர்னரிடம் நான் கடிதம் கொடுத்தபோது, அவர் ஓடி போய் மறைந்து கொண்டார். சாதாரண வழக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் இருந்த நிலையில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டு, ஒரே நாளில் பெங்களூரு சிறை செல்ல உத்தரவு வந்தது. அதற்கு பிறகு ஒரே நாளில் என் வாயால் அவரது பெயரை (எடப்பாடி பழனிசாமி) சொல்லக்கூட விரும்பவில்லை. அவரை முதலமைச்சராக்கி விட்டு சிறைக்கு சென்றேன்.
2 மாதத்திற்கு பின் சிறைக்கு வந்த 4, 5 அமைச்சர்கள் என்னை சென்னை சிறைக்கு வாருங்கள் என கூறினர். அதில் குறிப்பாக, செங்கோட்டையன், கர்நாடகா உள்துறை அமைச்சரிடம் கடிதம் வாங்கி, சென்னையில் உள்துறை செயலரிடம் வழங்கினால் சென்னை சிறைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றார். நமது ஆட்சியில் நான் சென்னை ஜெயிலுக்கு வந்தால் நல்லா இருக்காது. அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வார் என புகார் எழும். வேண்டாம் என மறுத்தேன். அதற்கு பிறகு பெங்களூரு ஜெயிலில் நின்னா குத்தம். நடந்தா குத்தம் என பல கொடுமைகளை அனுபிவித்தேன். காரணம், அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவரின் (எடப்பாடி பழனிச்சாமி) அழுத்தம்தான் காரணம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தேன். நல்ல வேளை. சாமி புண்ணியம், சென்னை சிறைக்கு செல்லவில்லை, அவர் கட்டுப்பாட்டில் இருந்த சிறைக்கு சென்றிருந்தால் நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கவே மாட்டேன்.
அதற்கு பிறகு எனது கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாத போதும், இறப்பின்போதும் பரோலுக்கு 15 நாள் கொடுக்க பெங்களுரூ சிறை நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் நான் உருவாக்கிய முதலமைச்சர் அரசு 5 நாள் தான் கொடுக்க முடியும் என கூறியதாக சிறை அதிகாரி கூறினார், அப்போ சென்னையிலிருந்து போன் செய்த போலீஸ் அதிகாரியின் பேச்சை போனில் ஸ்பீக்கர் போட்டு எனக்கு காட்டினார். அப்போது சென்னையிலிருந்து பேசிய அதிகாரி, ‘முதலமைச்சர் தான் 5 நாள் மட்டும் கொடுங்க என கூறினார்’ என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அதற்கு பிறகு நீக்க மட்டுமே செயல்படும் பொதுக்குழுவை கூட்டி என்னை கட்சியிலிருந்து நீக்கினார். சிறையிலிருந்து வந்தபோது வாகனத்தில் கொடி கட்டக்கூடாது என்றார். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என கார் மாறி வந்தேன். என்னை கைது செய்ய முயன்றனர். இவ்வளவு துரோகம் பண்ணியும், முதுகு, நெஞ்சில் ஈட்டியை கொண்டு குத்துவது போன்று குத்தினாலும் கட்சி, தொண்டர் நலனுக்காக 9 ஆண்டு அமைதியாக இருந்தேன். அவர் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. இவரை தொண்டர்கள், தமிழக மக்கள் எப்படி மதிப்பார்கள்? 10 தேர்தலில் தோல்வி, கட்சி அதால பாதாளத்திற்கு சென்று விட்டது, அதனை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது?
ஜெயலலிதா, என் மீது இருந்த 13 வழக்குகளில் 12 வழக்குகளில் விடுதலை கிடைத்தது, கடைசியாக ஒரு வழக்கு மட்டும் தான் இருந்தது. அரசு பதவியில் இல்லாத என் மீது வழக்கு போட்டனர்.
சட்டம், அதிகாரமோ வழங்கும் தீர்ப்பை காட்டிலும் மக்கள் தரும் தீர்ப்பே மகத்தானது. இனி அமைதியாக இருந்தால் தொண்டர்களும், மக்களும் விரும்ப மாட்டார்கள், எனவே தொண்டர், தமிழக மக்கள் நலன் கருதி, எதிரிகள், துரோகிகளை வேரறுக்கும்விதமாக புதிய கட்சி துவங்கும் முடிவில் இறங்கியுள்ளேன். தெற்கு சீமை வீரம் செழிந்தது. இந்த வீரம் செழிந்த மண்ணில் புதிய களம் அமைப்போம், விரைவில் கட்சி பெயர் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பதித்த கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியை அறிமுகம் செய்கிறேன். (கட்சிக்கொடியை காட்டினார்) பூலித்தேவன், ஒண்டிவீரன், வேலுநாச்சியார், மருது சகோதர்கள், கட்டப்பொம்மன், குயிலி, வஉசி, காமராஜர் மற்றும் முத்துராமலி்ங்கத்தேவர் ஆகிய சாதி, மதம் பார்க்காத தலைவர்கள் வாழ்ந்து சென்ற இந்த புண்ணிய பூமியில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* 39 ஆண்டு அரசியல் 9 ஆண்டு காத்திருப்பு
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் சசிகலா பேசும்போது, ‘‘இனி அரசியலில் எங்களது தருணம் வந்து விட்டது. 39 ஆண்டு அரசியலில், அனுபவத்தில் இதற்காகத்தான் 9 ஆண்டு காத்திருந்தேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இது தனிப்பட்டவர்களுக்கான கொடி அல்ல. மக்களுக்கான கொடி, ஏழைகளின் கொடி’’ என்றார்.
