சென்னை: தேர்தல் முடியும் வரை குடும்ப நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பதை தவிர்க்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் பேசியதாவது: தேர்தலுக்கு இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. திமுக சார்பில் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் விசிகவிற்கு அழைப்பு வரும். இச்சூழலில் கட்சியின் மறுசீரமைப்பில் மாவட்ட நிர்வாகத்தில் இறுதி செய்ய வேண்டும். 234 மாவட்டத்திற்கு செயலாளர்கள் நியமனம் செய்துவிட்டோம். இவர்களோடு செயல்பட மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யவும், தேர்வு செய்யவும் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 30 முதல் 35 மாவட்டம் வரை மட்டுமே ஒன்றிய, பேரூர் உள்ளிட நிர்வாக பட்டியல் வந்தது மற்றவை எப்போது என்ற கேள்வி உள்ளது?
இயக்க தோழர்கள் ஆயிரக்கணக்கில் நாள்தோறும் என்னை வந்து சந்திக்கின்றனர். இதற்கிடையில் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு கூட சரியாக செல்லமுடியவில்லை. ஒருநாளுக்கு ஒரு மணிநேரம் கூட ஓய்வு இல்லாமல் சுற்றுப்பயணத்தில் இருந்துகொண்டு இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஒப்புக்கொள்ளாத நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இது இயக்கத்திற்கு வலிமை சேர்க்காது. இப்படி இருப்பதால் கட்சி பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. என்னால் ஓய்வு எடுக்க முடியவில்லை என்பதை விட மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற மனஅழுத்தம் அதிகரிக்கிறது.
இந்நிலையில் கூட கல்யாணத்திற்கு வர வேண்டும், காது குத்தும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று இயக்க தோழர்கள் கொடுக்கும் நெருக்கடி என்னால் தாங்க முடியவில்லை. இதனை சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பதை தவிக்க வேண்டும். மண்டல பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கான பெயர் பட்டியலை பரிந்துரையாக வழங்கலாம். அதில் மாற்றங்கள் இருந்தால் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும். மேலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
