திமுக கூட்டணியில் இருப்பதுதான் காங்கிரசுக்கு நல்லது: சண்முகம் அட்வைஸ்

திருச்சி தாராநல்லூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டி: திமுக அணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கிறோம். சட்டமன்ற தேர்தலில் போடியிடும் தொகுதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் திமுக தலைமை தெரிவிக்கவில்லை. அதிமுக-பாஜ கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த முறை தொகுதிகளை குறைத்துக்கொண்டு போட்டியிட்டோம்.

இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் மாநிலக்குழு முடிவு. ஆகவே இரட்டை இலக்க தொகுதிகளை இம்முறை கேட்டுப்பெறுவோம். காங்கிரஸ், திமுக அணியை விட்டு வெளியேற கடுகளவு வாய்ப்பு கூட கிடையாது. இந்தியா கூட்டணி தொடர வேண்டுமெனில் காங்கிரஸ், இந்த அணியில் தான் இருந்தாக வேண்டும். சீட்டுகளை கூடுதலாக கேட்பது அந்தந்த கட்சியின் முடிவு. காங்கிரஸ் இந்த கூட்டணியில் நீடிப்பது கூட்டணிக்கு நல்லது. காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. எங்கள் பேச்சுவார்த்தை பாஜ உடன் தான். அதிமுகவுடன் இல்லை என டிடிவி தினகரன், ஜி.கே வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்தே இந்த கூட்டணி கட்டாயத்தின் பேரில் உருவானது என தெரிகிறது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை எனக்கூறி வருகிறார். இதிலிருந்தே இது இயற்கையாக உருவான கூட்டணி இல்லை என தெரிகிறது. தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே திமுக மீது விமர்சனம் வைத்து வருகிறார். அதை அவர் கடந்த 2ஆண்டுகளாக செய்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்திப்போம் என விஜய் கூறுகிறார். ஒருவேளை விஜய் தோல்வி அடைந்தால் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாரா? கரூர் துயர சம்பவத்தில் தார்மீக பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும். தப்பித்து செல்வது தலைவனுக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

* ரூ.5000 வழங்கியது நல்லது தேர்தலில் போட்டி இல்லை: நடிகர் சரத்குமார் பளீச்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சரத்குமார் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் பயணித்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். அவர்களுக்காக உழைப்பேன். உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் மகளிருக்கு வழங்கி இருக்கிறார்கள். அதற்காக, ரூ.6,550 கோடி செலவழித்து இருக்கிறார்கள். இது நல்லதுதான். இதை குறை சொல்வதற்கு இல்லை. வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் சென்று சேர்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பாஜவை தைரியமாக எதிர்க்கிறது நாங்கதான்: ஆதவ் காமெடி
தமிழக வெற்றி கழகம் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘‘தேர்தல் என்று வந்துவிட்டால் மாற்று கட்சியினர் சாதி, மதத்தை வைத்து தொகுதியை தேர்ந்தெடுப்பார்கள். இந்தியாவிலேயே பாஜவை தைரியமாக எதிர்ப்பது இருவர் தான். ஒன்று ராகுல் காந்தி, இன்னொன்று விஜய். ஒன்றிய பாஜ அரசை நாங்கள் எதிர்க்கவில்லை என கூறுகின்றனர். அப்படி எதிர்க்கவில்லை என்றால் எங்கள் தலைவரின் படமான ஜனநாயகன் வெளிவந்திருக்கும். ஆனால் படம் வெளிவராமல் உள்ளதால் நஷ்டத்தை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்.

நேற்று நடைபெற்ற வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் எங்கள் தலைவர் கரூர் துயரத்தின் வலியால் தான் கண்கலங்கினார்,’’ என்றார். பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், ‘‘234 தொகுதியிலும் தமிழக வெற்றி வெற்றிக் கழக வேட்பாளர்கள் நிற்பார்கள். ஆனால் 170 லிருந்து 180 சட்டமன்ற தொகுதிகள் நாம் வெற்றி பெறுவோம்,’’ என்றார். கரூர் சம்பவத்துக்கு முன் விஜய் சென்ற சில இடங்களில் பாஜவுக்கு எதிராக பேசினார். ஆனால், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு பின்பும், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்காமல் தள்ளி போட்டதற்கு பின்பும் பாஜ என்ற வார்த்தையே அவரது வாயில் வரவில்லை. ஏன், ஆதவ் அர்ஜூனா கூட பாஜவை எதிர்த்து பேசவில்லை. ஆனால், பாஜவை எதிர்ப்பதாக ஆதவ் வீரவசனம் பேசி கொண்டு வருகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Related Stories: