வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் டொனால்ட் டிரம்ப் முடிவில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இந்தியாவுக்கான இறக்குமதி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தில் இந்தியா மீது இந்த வரிச்சுமை ஏவப்பட்டது. இதனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீதம் வரியானது 18 சதவீதம் என குறைத்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தனிப்பட்ட நாடுகளின் மீது தன்னிச்சையாக வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி 6-3 என்ற விகிதத்தில் அதிரடி தீர்ப்பளித்தது. 1977ம் ஆண்டு சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் செல்லாது என தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் நுழையும் பொருட்களுக்கு உடனடியாக 10 சதவீதம் கூடுதல் வரியை விதித்து டிரம்ப் புதிய உத்தரவில் கையெழுத்திட்டார். வரும் 24ம் தேதி முதல் 150 நாட்களுக்கு டிரம்பின் புதிய வரிவிதிப்பு அமலில் இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியா ஏற்கனவே ஒப்புக்கொண்ட 18 சதவீதம் வரி விகிதம் மாறி, இனிமேல் 10 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். எனினும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளுக்கான வரி விலக்குகள் மற்றும் ஏற்கனவே உள்ள சிறப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘இந்தியாவுடனான எனது உறவு மிகவும் அற்புதமானது, வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலில்தான் உள்ளது’ என்றார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் வர்த்தகம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த சட்ட போராட்டத்தால் அமெரிக்க நுகர்வோர் மீதான வரிச்சுமை 16.9 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 17,500 கோடி டாலர் வரை வரிப்பணத்தை திரும்ப அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
