சென்னை : உலக தாய் மொழி தினத்தையொட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் வந்த நிலையில் அதனை அவர் நீக்கினார்.
இந்நிலையில், இதுகுறித்து விமர்சித்துள்ள திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, ” பாஜக மீதான விசுவாசம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்”, இவ்வாறு தெரிவித்தார்.
அதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி
உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.” இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “அதிமுக பாஜக பிடிக்குள் போய்விட்டது. மெல்ல மெல்ல அது காவி மையம் ஆகிறது என்ற கருத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். கவலையை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்கு சான்றாக தான் இந்தப் பதிவும் அமைந்திருக்கிறது. ஈவெரா பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம் இன்றைக்கு சங்பரிவார் பிடிக்குள் சிக்கி இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
