தவெகவில் 50 ஆயிரம் பேர் விருப்ப மனு வாங்கிச் சென்றனர் திருப்பி கொடுத்ததோ 5 ஆயிரம் கூட இல்லை: கடைசி நாளில் வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்

சென்னை: தவெகவில் 50 ஆயிரம் பேர் விருப்ப மனு வாங்கிச் சென்ற நிலையில் 5 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள்தான் மனுவை திருப்பி கொடுத்தார்களாம். மனு கொடுக்க கடைசி நாளான நேற்று பனையூரில் உள்ள அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் தற்போது 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. திமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணியும், அடுத்தநிலையில் அதிமுக கூட்டணியும் உள்ளது. புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் ஓரளவு கணிசமாக வாக்குகள் வாங்கினாலும், வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேநிலைதான் நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் ஆதரவுடன் உள்ள தவெக வேட்பு மனு விண்ணப்பம் விநியோகம் செய்வதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அப்போது விண்ணப்பம் பெற ரூ.100 மட்டும்தான் என்றதும் போட்டி போட்டு மனு வாங்கிச் சென்றனர். மனு வாங்க வந்தவர்களுடன் வந்தவர்களும் மனு வாங்கிச் சென்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் மனு வாங்கினர். இதை தவெகவினர் பெருமையாக குறிப்பிட்டு வந்தனர். ஆனால் மனு வாங்கியவர்களோ, இந்த மனுவை ரீல்ஸ் எடுத்து விளையாடத் தொடங்கிவிட்டனர். பலர் அதை பிரேம் போட்டு வீட்டில் வைத்துக் கொண்டனர். மனுவை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

கடைசி நாள் பிப்ரவரி 20ம் தேதி என்று அறிவித்தனர். அதில் விண்ணப்பம் கொடுக்கும்போது பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும் என்று தவெக அறிவித்தது. இதனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே விண்ணப்ப மனுவை திருப்பிக் கொடுத்தனர். மேலும், கடைசி நாளான நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டணிக்கு எந்தக் கட்சியும் முன் வராததும், அதிமுக மற்றும் பிற கட்சிகளில் இருந்து பெரிய தலைவர்கள் வருவார்கள் என்று விஜய் உள்ளிட்ட பலர் அறிவித்தும், ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளை தவிர மற்றவர்கள் வராததும்தான் கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதற்கு காரணம் என்கின்றனர் தவெகவினர்.

Related Stories: