புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி:தென் மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலையில் இருந்து அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து, இன்று வலுவிழக்கக் கூடும்.

அதேநேரம், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் இன்று உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் பிப். 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, பிப்.22ம் தேதி திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரு நாட்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக் கடலில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: