நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார்; லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நகராட்சி துறையில் பணி நியமனம் தொடர்பாக அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதியுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய கூறி, அமலாக்க துறை சார்பில் தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றார். தமிழக அரசு தரப்பில், அமலாக்க துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்க துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அமலாக்க துறை போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால் ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவையில்லை. அமலாக்க துறை அளித்த கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: