லக்னோ: உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டி டிராவில் முடிந்தபோதும், கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி, கடந்த 15ம் தேதி முதல் கர்நாடகா-உத்தரகாண்ட் அணிகள் இடையே நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் கர்நாடகா 736 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கே.எல்.ராகுல் 141, கேப்டன் தேவ்தத் படிக்கல் 232, ஸ்மரன் ரவிச்சந்திரன் 135 ரன் குவித்தனர். உத்தரகாண்ட் அணி, தனது முதல் இன்னிங்சில் 233 ரன்கள் எடுத்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதையடுத்து 2வது இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி, கடைசி நாளான நேற்று 6 விக்கெட் இழந்து 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அவ்னீஷ் சுதா 66, ஆதித்யா ராவத் 53 ரன்கள் எடுத்தனர். போட்டி டிராவில் முடிந்தபோதும், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசியதால் கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கர்நாடகா – ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி, வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி 11 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆடுகிறது. அதேசமயம், ஜம்மு காஷ்மீர் ரஞ்சி வரலாற்றில் முதல் முறை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
