உலகக்கோப்பை டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி நடை

கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் நேற்று, இத்தாலி அணியை 42 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வென்றது. ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரின் 37வது போட்டி, கொல்கத்தாவில் சி பிரிவில் நேற்று நடந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ்-இத்தாலி அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் பிராண்டன் கிங் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஷாய் ஹோப் அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 75 ரன் எடுத்து அவுட்டானார்.

பின் வந்த வீரர்களில் ரோஸ்டன் சேஸ் 24, ஷெர்பேன் ரூதர்போர்டு ஆட்டமிழக்காமல் 24 ரன் எடுத்தனர். 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் மட்டுமே இழந்து 165 ரன் சேர்த்தது. பின், 166 ரன் வெற்றி இலக்குடன் இத்தாலி களமிறங்கியது. துவக்கம் முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இத்தாலி வீரர்கள் திணறினர். துவக்க வீரர் ஆன்டனி மோஸ்கா 19, ஜேஜே ஸ்மட்ஸ் 24, பென் மனேன்டி 26 ரன் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 18 ஓவரில் இத்தாலி 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், வெஸ்ட் இண்டீஸ் 42 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4, மேத்யூ போர்ட் 3, குடகேஷ் மோத்தி 2 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: