×

மூன்றாம் பாவம் பத்திர வில்லங்கங்கள் கவனம்!

எந்த ஒரு கிரக அமைப்பை ஆராயும் பொழுதும், கோள் சாரத்தை மனதில் கொள்ள வேண்டும். தசாபுத்திகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் மூன்றாம் பாவத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாம் இடம் என்பது பிரயாணம், இடமாற்றம், பத்திரங்கள் முதலிய விஷயங்களை அடக்கியது. இன்னும் ஏராளமான விஷயங்கள் அதில் இருக்கின்றன.ஆனால், அதன் பலன்களை, அந்தந்த தசா புக்திகளின்போது மட்டும்தான் அல்லது கோள்சார நிலையில்தான் அனுபவிக்க முடியும்.கோள்சார நிலையில் அந்த பாவத்தின் அனுபவம் (அது எந்த பாவமாக இருந்தாலும்) என்பது தற்காலிகமாகவும், தசாபுத்தியின் அடிப்படையில் அமையும்போது அந்த தசா புத்தி முடியும் காலம் வரையிலும் இருக்கும்.

ஜோதிட ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல விரும்புகின்றேன்.ஒரு ராசி இயங்கும்போது, மற்ற 11 ராசிகளும் இயங்கவே செய்யும் என்பதை எப்பொழுதும் மறந்து விடக்கூடாது.இதை இப்படி விளக்கலாம். 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு உறுப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒன்றாவது ராசி தலை, மூளை. இரண்டாவது ராசி முகம், கண்கள், வாய். மூன்றாவது ராசி தோள்கள், கைகள், நுரையீரல், கழுத்து, பேச்சு.நான்காவது ராசி மார்பு, விலா, மேல் முதுகு. ஐந்தாவது ராசி இதயம், முதுகுத் தண்டு, மேல் முதுகு.ஆறாவது ராசி வயிறு, ஜீரண மண்டலம், குடல் பகுதி ஏழாவது ராசி சிறுநீரகம், இடுப்பு பகுதி. எட்டாவது ராசி இனப்பெருக்க உறுப்புக்கள். ஒன்பதாவது ராசி தொடைகள், இடுப்பு எலும்புகள்.பத்தாவது ராசி முழங்கால்கள், எலும்புகள், மூட்டுகள்.பதினொன்றாவது ராசி கணுக்கால், நரம்பு மண்டலம். பன்னிரெண்டாவது ராசி பாதங்கள், பாத விரல்கள்.

ஒரு மனிதன் அன்றாடம் இயங்க வேண்டுமானால் அவன் தலை மட்டும் இயங்காது. முகம் மட்டும் இயங்காது. கால்கள் மட்டும் இயங்காது. 12 ராசிகளுக்கான அங்கங்களும் ஒரே நேரத்தில் இயங்கினால்தான் செயல்பட முடியும்.கால்கள் நடக்கும்போது கண்கள் பார்க்கும். காது கேட்கும். கை வேலை செய்யும். இதைப் போலத்தான் ஒரு குறிப்பிட்ட ராசி இயங்கும் பொழுது தொடர்புடைய ராசிகள் அதனோடு சேர்ந்து நல்ல விதமாகவோ எதிர்மறையாகவோ இயங்கும் என்பதுதான் ஜோதிட விதி.எனவேதான், ஒரு குறிப்பிட்ட ராசியில் குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் நம்மால் திட்டமிட்டுச் சொல்ல முடிவதில்லை.

ஆனால், அந்தந்த தசா புத்தி மற்றும் கோள்சார காலங்களில் அவைகள் பிரதானமாக நடந்து மற்ற ராசிகளின் இயக்கத்தை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.மூன்றாம் பாவத்தை எழுதும்பொழுது என்னுடைய சொந்த அனுபவத்தையும் நான் எழுதுகின்றேன்.சென்ற வாரம் தை மாதம் 16-ஆம் தேதி, ஜனவரி மாதம் 28-ஆம் தேதி நடந்த இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றேன்.அதற்கு முன் அன்றைய கோள் சாரத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.மிதுனத்தில் குரு. சிம்மத்தில் கேது. மகரத்தில் சுக்கிரன், சூரியன், புதன், செவ்வாய். கும்பத்தில் சனி ராகு. முதல் நிகழ்வு.

எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவர், தான் எப்பொழுதோ வாங்கிய ஒரு சிறிய சொத்தை, (காலி மனை) விற்பனை செய்ய வேண்டும் என்று முதல் நாள் சொன்னார்.நான் எதேச்சையாகச் சொன்னேன்.‘‘ஏன் அடுத்த வாரம் செல்லலாமே’’ என்று சொன்ன பொழுது அவர் சொன்னார்.‘‘ போகலாம்தான். ஆனால், அந்தச் சொத்தை வாங்கிக் கொள்கிறவர், தனக்கு அடுத்தவாரம் விடுமுறை இல்லை என்கிறார். அடுத்து தை மாதம் வளர்பிறை, புதன் கிழமை முகூர்த்த தினமாக இருப்பதால் (28.1.2026 புதன்கிழமை நல்ல முகூர்த்த தினம்) அன்றே பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்’’ என்று சொன்னார்.பேருந்தில் செல்ல முடியாத அளவுக்கு அவருடைய உடல் நலம் இருந்ததால் ஒரு வாடகை கார் வைத்து ஊருக்குப் புறப்பட்டார்.அன்று மாலையில் ‘‘என்ன ஆயிற்று. பதிவு சுமுகமாக முடிந்து விட்டதா?’’ என்று கேட்ட பொழுது வருத்தத்தோடு சொன்னார்.

‘‘இல்லை பதிவு முடியவில்லை. வெறும் அலைச்சல் தான் மிஞ்சியது.’’‘‘ஏன்?’’‘‘பத்திரத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இப்பொழுது விஷயம் முடியாது போல இருக்கிறது’’ என்றார்.சரி, கிரகங்கள் என்ன சொல்லுகின்றன என்பதற்காக, எப்பொழுதோ எழுதி வைத்திருந்த குறிப்பு நோட்டை எடுத்து அவர் ஜாதகத்தைப் பார்த்தேன்.மிருகசீரிஷ நட்சத்திரம். மிதுன ராசி. மிதுன லக்னம். 5:12 க்குரிய சுக்கிர திசை நடந்து வருகிறது.இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மிதுன ராசி லக்கினத்திற்கு மூன்றாம் இடம் சூரியன். நாம் மூன்றாம் இடத்தைப் பற்றித் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாம் இடம் எட்டாம் இடத்தோடு தொடர்பு கொண்டால், பத்திரப்பதிவு ஒப்பந்தங்களில் வில்லங்கங்கள் சிக்கல்கள் வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.இப்பொழுது கோள் சாரத்தைப் பாருங்கள். மிதுனத்துக்கு மூன்றுக்குரிய சூரியன் எட்டாம் இடத்தில் மகரத்தில் இருக்கிறார். நட்சத்திர நாதன் செவ்வாயும் 8ல் மகரத்தில் இருக்கிறார்.3/8 தொடர்பு வந்துவிட்டது. அவரோடு சேர்ந்து பூர்வீகச் சொத்தைக் குறிக்கக்கூடிய ஐந்தாம் இடத்து அதிபதி சுக்கிரன் 8ல் இருக்கிறார்.அவரோடு சேர்ந்து எழுத்து, ஒப்பந்தம் குறிக்கக்கூடிய புதனும் இணைந்து இருக்கிறார்.

அவரோடு சேர்ந்து மிதுனத்துக்கு ஆறாம் இடத்து அதிபதியாகிய வழக்கு, கடன், விரோதம் இவற்றைக் குறிக்கக்கூடிய செவ்வாயும் இணைந்து இருக்கிறார்.இத்தனையும் சேர்ந்து ஒப்பந்தப் பத்திரத்தில் சிக்கலை ஏற்படுத்தி பத்திரப் பதிவை தடுத்து நிறுத்தி விட்டது.மூன்று – பிரயாணம். எட்டாம் இடம் அதில் ஏற்படும் அசௌகரியங்கள் கஷ்டங்கள். வாடகைக்கு காரில் சென்று வீணாகத் திரும்பி வந்ததே மிச்சம். பத்திரம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அன்று மூழ்கி இருந்ததால் நேரத்திற்குச் சாப்பிட முடியவில்லை.

சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க முடியவில்லை. காரணம், 12-ஆம் இடத்து சுக்கிரன் எட்டாம் இடத்தில்தான் இருக்கிறார். வீணான செலவுகள். மன உளைச்சலை அவர் பங்குக்குத் தந்து விட்டார்.மூன்று – ஒப்பந்தம், ஐந்து – பூர்வீகச் சொத்து, ஆறு – வில்லங்கங்கள், எட்டு – தடைகள், மனக் கஷ்டங்கள், நஷ்டம், 12 – தேவையற்ற மன உளைச்சல், வீண் செலவுகள் என அந்தந்த ராசிக்குரிய பலாபலன்களை அன்று கிரகங்கள் தந்து விட்டதை பார்த்ததில் வியப்பே விஞ்சி நின்றது.

போதாததற்கு, மிதுன ராசி / லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சனியின் பார்வை மூன்றாம் இடத்தில் விழுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதை முன்னாடியே பார்த்து, தவிர்த்திருக்கலாமே என்று நினைக்கலாம். ஆனால், நான் இத்தனை வருட கூர்ந்த கவனத்தில் சொல்லுகின்றேன். நம்மைவிட கிரகங்கள் கெட்டிக்காரத்தனமாகத்தான் செயல்படும். நடந்துதான் தீர வேண்டும் என்று சொன்னால், நம் மதியை மயக்கி, தன் வேலையைக் காட்டி விடும். இது சம்பந்தமாக அதே தேதியில் நடந்த இன்னொரு அனுபவத்தையும் சொல்லுகின்றேன்.

 

Tags :
× RELATED எது மகிழ்ச்சியான விடுதலை?