பகுதி 2
ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு உள்ளம் உருகியது.‘‘என்ன பக்தி! என்ன பக்தி! அந்தக் குழந்தைக்குத்தான் என்ன பக்தி!’’ என்று நினைத்தார். மனமாற ஸ்ரீதியாகராஜசுவாமிகள் அவ்வாறு நினைக்கும் அதே நேரத்தில், எதிர்பாராத விதமாக பாகவதர் அங்கு வந்து நமஸ்காரம் செய்தார். பொங்கிய பால் வழிவதைப்போல, ஏற்கனவே பாகவதரின் செயலால் மனம் கசிந்திருந்த ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், அப்போதே பாகவதரை ஆசீர்வதித்து, ஸ்ரீராம தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். அப்போதுகூட, ‘‘நான் உனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கிறேன்’’ என்று ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சொல்லவில்லை.
‘‘எனக்கு சங்கீதம் கற்றுக் கொடுங்கள்!’’ என்று பாகவதரும் கேட்கவில்லை. வழக்கப்படி, ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் மற்ற சீடர்களுக்குப் பாடம் நடத்தும்போது, தனித்து ஒதுங்கியிருந்து கேட்டு வந்தார், பாகவதர். அவ்வாறு கேட்டதை, சில சமயங்களில் தனியாக வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாடுவார். பாடுவது நன்றாக இருப்பதுடன் தெளிவாகவும் இருக்கும். அதை ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கவனித்து வந்தார். பாகவதரும் மற்ற சிலரும், ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் பூஜைக்கு உண்டான பொருட்களைக் கொண்டு வந்து, ஸ்ரீ சுவாமிகளின் வீட்டில் கொடுப்பது வழக்கம்.
அவற்றைப் பூஜை நேரத்தில் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்வது, ஸ்ரீசுவாமிகளின் வழக்கமாக இருந்தது. மலர்களோ கனிகளோ எது கிடைத்தாலும், அவற்றைத் தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யாமல், ஸ்ரீசுவாமிகள் உபயோகிக்க மாட்டார். ஒருநாள், பாகவதர் பலவிதமான பூக்களையும் பழங் களையும் கொண்டு வந்து, ஸ்ரீசுவாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார். அவர் வந்த நேரம், வழக்கப்படி நடக்கும் காலபூஜை முடிந்திருந்தது. ஆகையால், பாகவதர் கொண்டு வந்த மலர்களையும் கனிகளையும் சுவாமி சந்நதியில் வைத்த ஸ்ரீ சுவாமிகள், `‘துளஸி தளமுலசே சந்தோஷமுகா பூஜிந்து’’ எனும் கீர்த்தனையைப் பாடியபடியே தேவதார்ச்சனை செய்தார்.
அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தக் கீர்த்தனையின் சரணத்தைப் பாடி அர்ச்சனை செய்யும் போது, ஸ்ரீசுவாமிகள் வாக்கில் என்னென்ன மலர்கள் வந்தனவோ, அதே மலர்கள் ஸ்ரீசுவாமிகளின் கரங்களிலும் தோன்றின. ஸ்ரீசுவாமிகளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அதை அங்கிருந்த தஞ்சைராமராவ் முதலான சீடர்களுக்குக்கூறி, மறுபடியும் மறுபடியும் அதேவிதமாக சரணத்தைப் பாடிக் கொண்டே அர்ச்சனை செய்தார். அதே அதிசயம் மறுபடியும் நிகழ்ந்தது.
‘‘இந்த வேங்கடரமணனிடம் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்’’ என்று எண்ணிய ஸ்ரீசுவாமிகள், பகவத் பிரசாதத்தை பாகவதரிடம் தந்தார். அவரை வணங்கிப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார் பாகவதர்.‘‘இங்கே சங்கீதம் கற்க இஷ்டமா?’’ எனக்கேட்டார் ஸ்ரீ சுவாமிகள். தன்னுடைய பலநாள் விருப்பம் நிறைவேறும் காலம், இன்று வந்திருக்கிறது என்று எண்ணிய பாகவதர், மறுபடியும் ஸ்ரீசுவாமிகளின் திருவடிகளில் விழந்து எழுந்தார். அன்று முதல் ஸ்ரீசுவாமிகளிடத்தில் நேர்முகமாக சங்கீதம் கற்கும் சீடராக ஆனார், பாகவதர். அவருக்கு குருவாக இருந்து சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளை இனி, ‘`குருநாதர்’’ என்ற பெயரிலேயே பார்க்கலாம். பாகவதர், சிறுவயது முதலே உடற்பயிற்சி செய்து, உடம்பைப் பக்குவமாகப் பாதுகாத்து வந்தார்.
அவர் ஒரு ஹட யோகியும்கூட! நல்ல உயரம்; அதற்கேற்ற உடற்பருமன்; மிகுந்த பலம் ஆகியவைகளுடன் கூடிய பாகவதரை, சக மாணவர்கள் (சீடர்கள்) ‘‘கணபதி’’ என்று வேடிக்கையாக அழைப்பார்கள். அவர்கள் அவ்வாறு வேடிக்கைக்காக அழைத்தாலும், ஓர் உண்மையும் அதில் இருக்கிறது! காசியிலிருக்கும் கணபதியின் அருளால், அவர் அம்சமாகவே பிறந்தவராயிற்றே இவர்! அதனால்தான் போலிருக்கிறது, பாகவதரை ‘கணபதி’ என்றே சக மாணவர்கள் அழைத்தார்கள்.
அதை நிரூபிப்பதுபோல, ஒரு நிகழ்ச்சி நடந்தது. திருவையாறில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில், ஒரு தோட்டம் இருந்தது. தோட்ட உரிமையாளருக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளிடம் அபரிமிதமான அன்பும் பக்தியும் இருந்தன. அவர் ஒருநாள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைத் தேடிவந்து,‘‘சுவாமி! தோட்டத்தில் பூசணிக்காய்கள் ஏராளமாக, நன்றாக விளைந்து இருக்கின்றன. இங்கு நடக்கும் சந்தர்ப்பணைக்காகப் பூசணிக்காய்களை ஒதுக்கி வைத்திருக்கிறேன். அவைகள் நன்றாக விளைந்து, பெரும்பெரும் காய்களாக இருக்கின்றன. ஆகையால் சுவாமி! தகுந்த சரியான ஆளை அனுப்பினால், அக்காய்களைக் கொடுத்தனுப்பி விடுவேன்’’ என்றார். அதைக்கேட்ட அங்கிருந்த சீடர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில்,
‘‘கணபதியிருக்கக் கவலை ஏன்?
கணபதியை அனுப்பலாம்’’ என்றார்கள். ‘‘உண்மைதான்! அவன் வாஸ்தவத்திலேயே கணபதி அம்சம் பொருந்தியவன்தான்’’ என்ற குருநாதர், பாகவதரையே பூசணிக்காய்களைக் கொண்டுவர அனுப்பினார். குருநாதர் உத்தரவையேற்றுப் போன பாகவதர், தோட்டத்தில் பார்த்தார். பெரும்பெரும் காய்களாக எட்டு காய்கள் இருந்தன. அவற்றைக் காட்டிய தோட்டக்காரர்,
‘‘இந்தக் காய்ங்கதான்’’ என்றார்.
அத்துடன், ‘‘முடிந்ததை இன்று கொண்டுபோங்கள்! மற்றதைப் பிறகு வந்துகூட, எடுத்துப் போங்கள்!’’ என்றார். சற்றும் அசரவில்லை பாகவதர். எட்டு காய்களையும் கயிறால் கட்டி, தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு, குரு நாதரின் வீட்டில்கொண்டு வந்து சேர்த்தார். அதன்பின் களைப்பு காரணமாக, அப்படியே அயர்ந்து திண்ணையில் படுத்துவிட்டார். பாகவதரைப் பார்த்த சீடர்கள், குருநாதரிடம் போய், நிலைமையைச் சொன்னார்கள். உடனே வாசல் திண்ணைக்கு வந்து, சீடனின் நிலைகண்ட குருநாதர், பாகவதரின் முகத்தில் துளஸி தீர்த்தத்தைத் தெளித்தார். பாகவதருக்கு சற்று நினைவு திரும்பியவுடன், அவரைச் சுற்றியிருந்த பூசணிக் காய்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார்.
அதன்பின் பாகவதரிடம், ‘‘என்னப்பா இது! ஏன் இப்படிச் செய்தாய்? ஒரே தடவையில் அவ்வளவையும் சிரமப்பட்டு, எடுத்துக் கொண்டு வரவேண்டுமா என்ன?’’ என்று கேட்டார். அதற்குள் தெளிவுபெற்ற பாகவதர், ‘‘குருநாதா! தோட்டக் காரரோ வியாபாரி. பகவானுக்காக வைக்கப்பட்ட காய்களை, வேறு யாராவது வந்து அதிக விலைக்குக் கேட்டால், கொடுக்க வேண்டியதாக இருக்கும். அவருக்கு பகவத் அபசாரமும் பாகவத அபசாரமும் வந்துவிடும். அது கூடாதென்றுதான், இப்படிச் செய்தேன்’’ எனப் பதில் சொன்னார். பாகவதரின் பக்தியைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். குருநாதரிடம் நேர்முகமாகப் பாகவதர் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தும், அவர் கேள்வி ஞானத்தால் பாடிய அளவுகூட, அவரால் பாட முடியவில்லை. குருநாதர் பார்த்தார்;
‘‘ஓகோ! ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியிடம் அனுமதி பெறாமல், ஆரம்பித்ததுதான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்’’ எனத் தீர்மானித்தார். அதன் காரணமாக அன்று பூஜை முடிந்ததும் சுவாமி சந்நதியில், ஷட்வித மார்க்கினி ராகத்தில் ‘ஞானமொஸக ராதா?’ (இவனுக்கு ஞானம் கொடுக்கலாகாதா?) எனும் பாடல் பாடி வேண்டினார். அப்பாடலைப்பாடி, பாகவதருக்கு அருள்புரிந்து பாடம் ஆரம்பிக்க விளைந்தது அதிசயம். அன்றுமுதல் பாகவதர், “ஏக சந்தக்ராஹியாக’’ (ஒருமுறை கேட்டாலே மனதில் பதியும் வண்ணம்) விளங்கினார்.
அது மட்டுமல்ல! குருநாதரிடம் மிகுந்த அன்பு கொண்டு, அவருக்குப்பணிவிடை செய்வதிலும் மிகுந்த ஊக்கம் உடையவராக விளங்கினார். இருபத்தாறு ஆண்டுகள் இவ்வாறு பணி விடை செய்து வந்த பாகவதர், குருநாதரின் அன்புக்கு உகந்த சீடராகவும் விளங்கினார். பாகவதர், யோகாப்பியாசத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்ததால், நாற்பது வயதுவரை அவருக்குத் திருமணத்தில் இஷ்டம் இல்லாமல் இருந்தது.
அதன்பின், நாற்பத்தொன்றாவது வயதில், முத்து லட்சுமியம்மாள் எனும் கன்னிகையை, குருநாதர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீ சீதாராமரை நேருக்குநேராகத் தரிசனம் செய்யும் பாக்கியம்பெற்ற குருநாதர், கலந்து கொண்டு ஆசீர்வதிக்கிறார் என்றால், பாகவதர் எவ்…வளவு புண்ணியசாலியாக இருக்க வேண்டும். குருநாதருக்கு மிகவும் பிரியமான பிரதமசீடர் ஆயிற்றே! குருநாதர் கட்டளைப்படி, தான் இயற்றிய கீர்த்தனைகள் எல்லாவற்றிலும், ‘ஸ்ரீதியாகராஜா’ எனும் முத்திரையோடு, பாடல்களை இயற்றினார் பாகவதர். தாம் இயற்றிய பாடல்களை சத்குரு காணிக்கையாக ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கே சமர்ப்பணம் செய்த உத்தமர் இவர்.
என்ன இருந்து என்ன செய்ய? தஞ்சை பகுதிகளில் பாகவதருக்குத் தகுந்த ஆதரவும் அரவணைப்பும் இல்லை. அதை எண்ணி மனதிற்குள் வருத்தத்திலேயே இருந்தார், பாகவதர். திருமணம் நடந்துவிட்டது. இல்லறம் நடக்கப் பொருள் வேண்டுமே!
அதற்காக நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். பட்டு, கைத்தறித் துணிகளைச் சுமந்து கொண்டுபோய், ராணிப்பேட்டை, வாலாஜாப் பேட்டை என ஊர்ஊராகப்போய் விற்று, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, வாழ்க்கையை நடத்தி வந்தார். நாற்றங்காலில் இருக்கும் நெற்பயிர், விளைநிலங்களில் மதிக்கப்பட்டு நன்கு பராமரிக்கப் படுவதைப்போல, தஞ்சையில் ஆதரவில்லாத பாகவதரின் பெருமையை, வாலாஜாப் பேட்டை – ராணிப் பேட்டை வாசிகள் தெரிந்து கொண்டு, ஆதரவு அளித்தார்கள். அங்குள்ள சங்கீத சபைகள், பாகவதரை நன்கு வரவேற்று கௌரவப்படுத்தி, சங்கீதக் கச்சேரிகள் பலவற்றை நிகழ்த்தச் செய்தார்கள். பாகவதரின் சங்கீதத்திறமை, அவருக்கு மேலும் மேலும் பல வாய்ப்புகளை உருவாக்கின.
ஒருசமயம், பாகவதர் அய்யம்பேட்டையில் தன் வீட்டில் இருந்தபோது, வாலாஜாபேட்டையில் இருந்து யாத்திரையாக வந்த சௌராஷ்டிர முக்கியஸ்தர்கள் சிலர், பாகவதரின் வீடு தேடி வந்தார்கள். வந்தவர்களை வரவேற்ற பாகவதர், அவர்களுக்கு விருந்து உபசாரங்கள் செய்தார். வந்த செல்வந்தர்கள், அதன்பின் பாகவதரிடம் தாங்கள் வந்த நோக்கத்தை விவரித்தார்கள்.‘‘சுவாமி! தாங்கள் வாலாஜா பேட்டைக்கு வந்து, அங்கேயே வாசம் செய்ய வேண்டும்.
அங்கு உள்ள சிறுவர் – சிறுமிகளுக்கு சங்கீதம், புரோஹிதம், கல்வி ஆகியவைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் ஜீவனத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். தங்குவதற்கு நல்ல வசதியான வீடு, தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், சம்பாவனை என அனைத்தும் அளிக்கிறோம். உடனேபுறப்பட்டு வாருங்கள்!’’ என வேண்டுகோள் விடுத்தார்கள். கூடவே, பலவிதமான பழங்கள், பணமுடிப்பு ஆகியவைகளையும் பாகவதரிடம் அளித்து, நமஸ்காரம் செய்தார்கள். பாகவதர் நெகிழ்ந்தார். வந்தவர்கள் தொடர்ந்தார்கள்.
‘‘சுவாமி! இது வாலாஜாப் பேட்டை வாழ் முக்கியஸ்தர்களும், சௌராஷ்டிர சபை அதிகாரிகளும் சேர்ந்தெடுத்த முடிவு. அவர்கள்தான், உங்களை அழைத்து வரும்படியாக எங்களை அனுப்பி வைத்தார்கள். மறுக்காமல் இவற்றைஏற்றுக் கொள்ளுங்கள்!’’ என வேண்டினார்கள். பாகவதர் ஏற்றுக் கொண்டார். அவர் ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில், வந்தவர்கள் மேலும் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்கள். புறப்படும்போது, ‘‘சுவாமி! உங்கள் ஒப்புதலை அங்கே தெரிவித்துவிட்டு, வேண்டிய அனைத்தையும் செய்து தயாராக வைக்கிறோம். தாமதம் செய்யாதீர்கள்! ஒரு நல்ல நாளாகப் பார்த்து, வந்து விடுங்கள்!’’ என்றுகூறி விடை பெற்றார்கள்.
(அடுத்த இதழில் இசைக்கப்படும்…)
V.R.சுந்தரி
