×

உபயசாரி யோகம்

ஜோதிடத்தில், பல வகையான முறைகளும் நுணுக்கங்களும் இருக்கிறது. எல்லோருக்கும் பார்ப்பதற்கு பன்னிரெண்டு கட்டங்கள், ஒன்பது கிரகங்கள்தானே என சாதாரணமாகத் தெரிந்தாலும், எதன் அடிப்படையில் ஒரு தீர்வை கண்டறிவது என்பது சாதாரணமான அமைப்பு அல்ல. அதை அறிந்து கொள்வதற்கும், நுணுக்கமாக கண்டறிவதற்கும், திறமையும் திடமான நம்பிக்கையும் வேண்டும். ஜோதிடம் என்பது நம் நாட்டில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் உள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைகளை கையாண்டு வருகிறார்கள். நம் நாட்டில் உள்ள முறைகளிலும் பல்வேறு உள்ளன. அவ்வாறு உள்ள முறைகளும் ஒவ்வொரு அடையாளத்தையும் கிரகத்தையும் அடிப்படையாக வைத்தே பலன்கள் கண்டறியப்படுகிறது. அதில், கிரகங்களின் இணைவுகளான உபயசாரி யோகம் பற்றி காண்போம்.

உபயசாரி யோகம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு முன்னும் அதாவது, இரண்டாம் (2ம்) பாவகத்திலும், சூரியன் இருக்கும் ராசிக்கு பின்னும் அதாவது, பன்னிரண்டாம் (12ம்) பாவகத்திலும் சுபகிரகங்களான வியாழன், சுக்ரன், புதன் இருந்தால் அது உபயசாரி யோகம் என்றழைக்கப் படுகிறது. இது சுப உபயசாரி யோகமாகும். இவ்வாறு ஒரு கிரகச் சூழ்நிலைகள் ஏற்படும்பொழுது, சாயா கிரகங்கள் இந்த யோகத்திற்குள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் சில தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த உபயசாரி யோகமானது, சுப உபயசாரி யோகம் என்றும் அசுப உபயசாரி யோகம் என்றும் இருவகையாக அழைக்கப்படுகிறது.

உபயசாரி யோகத்தின் சூட்சும அமைப்புகள்

சூரியனை ஆத்மகாரகன் என்றும், தந்தை என்றும் ஜோதிடம் வலியுறுத்துகிறது. ஆகவே, இந்த சூரியனோடு தொடர்புடைய நபர்கள் சுபத்துவமாகவும், அதிக நன்மை செய்பவர்களாகவும் இருப்பர். மேலும், இவர்களின் தொடர்பானது லக்னத்தின் பாவாதிபதிகளைப் பொறுத்து மாற்றங்கள் இருக்கும். அரசியல் துறை மற்றும் அரசின் நிர்வாகத் துறையில் பணிபுரிபவர்களோடு தொடர்புகள் உண்டு. இது பெளர்ணமி திதியோடு தொடர்பிருந்தால், இன்னும் நிச்சயம் பெரிய நிர்வாகத் தொடர்பை செய்து கொண்டிருப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

உபயசாரி யோகத்தின் பலன்கள்

* நீண்ட ஆயுள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
* பொருளாதாரத்தில் சிறந்து விளங்கு வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
* தன்னம்பிக்கை உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு உடையவர்களாகவும் இருப்பர்.
* எப்பொழுதும் வாழ்வில் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும், எதிலும் நேர்மறை சிந்தனைகளை உடையவர்களாக இருப்பர்.
* உங்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள், அவர்களே தங்களுக்கான இடர்பாடுகளை தேடிக் கொள்வார்கள்.
* புகழ் உண்டாவதற்கான காரியங்கள் இயல்பாகவே செய்யும் மனப்பாங்கு உடையவர்களாக இருப்பர்.
* சிலருக்கு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தொடர்பான மேற்படிப்புகளையும், இன்னும் சிலருக்கு நிர்வாகம் சார்ந்த மேற்படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
* பொருளாதாரத் தொடர்பான முதலீடுகள் நல்ல ஏற்றத்தை தரும். அணிகலன்கள் தொடர்பான முதலீடுகள் நல்ல ஏற்றத்தை தரும்.
* நெருக்கடியான காலகட்டத்திலும் சிறப்பான முடிவுகளை எடுக்கக்கூடிய சிந்தனைகள் உருவாகும்.
* உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் உள்ள நபர்களுக்கான சுபநிகழ்வுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளும் அதற்கு தலைமை தாங்கும் பொறுப்புகளும் உங்களை வந்து சேரும்.
* எந்த நிறுவனத்திலும் உள்ள நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளோடு முக்கிய முடிவுகளுக்கான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.
* கோயில் கட்டுவதற்கும், ஆன்மிகப் பணிகள் தொடர்பான செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உபயசாரி யோகம் மேம்படுவதற்கு என்ன செய்யலாம்

* நீங்கள் தினமும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகள் செய்வது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நல்ல சிந்தனைகளையும் திட்டங்களையும் உருவாக்கும்.
* சூரியனின் கதிர்கள் நேரடியாக விழுகின்ற சிவஸ்தலங்களுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது நன்மைகளை உண்டாக்கும்.
* உங்களின் முன்னோர்களுக்கான தர்ப்பண காரியங்களை தடையில்லாது செய்வதும், பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதும் தடை தகர்த்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
* பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிவபெருமானுக்கு நீங்களே வழிபாடு செய்வது சிறப்பான சிந்தனைகளை உருவாக்கும்.
* உங்களால் முடிந்தளவு அனாதை இல்லங்களுக்கு அல்லது முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவிகள் அல்லது சேவைகள் செய்து, உங்கள் பிறந்த நாளை கொண்டாடுங்கள், மற்றவர்களின் ஆசீர்வாதங்கள் உங்களை உயர்த்தும்.
* முச்சுப் பயிற்சி செய்வதும் தியானப் பயிற்சிகள் செய்வதும் கர்வம் இல்லாமல் சகஜமாக மற்றவர்களுடன் வாழும் வாய்ப்பை உண்டாக்கும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

Tags :
× RELATED எது மகிழ்ச்சியான விடுதலை?