பதிவு நீக்கத்தை எதிர்த்து மமக, தமமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: தேர்தலில் 6 ஆண்டுகள் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத, செலவு கணக்கை தாக்கல் செய்யாத தேர்தல் ஆணைய விதிகளை மீறிய 474 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்தாண்டு செப்டம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, அகில இந்திய சிவில் உரிமைகள் பாதுகாப்பு கட்சி, அனைத்து மக்கள் நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், எங்களது கட்சிகள் சார்பில் ஏற்கெனவே பல்வேறு தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டுள்ளோம். எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், எஸ்.பிரபாகரன், என்.எல்.ராஜா, ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் வழக்கறிஞர் அபிஷா ஐசக், ஏ.ஜான் வின்சென்ட், கே.கவுதம்குமார் உள்ளிட்டோர் ஆஜராகி, 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க வழிவகை செய்யும் விதிகள் கடந்த 2014ம் ஆண்டு தான் அமலுக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பு தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அந்த விதிகள் பொருந்தாது.

எனவே,அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், என வாதிட்டனர். இதற்கு பதிலளித்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், தேர்தல் ஆணைய விதிகளின்படி 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றாலும் அந்த கட்சிகளின் பதிவுகளை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 5 நீதிபதிகள் அமர்வும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சம்மந்தப்பட்ட கட்சிகளின் பதிவுகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: