சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மயிலம் தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார் பேசுகையில், ‘‘மயிலம் தொகுதிக்குட்பட்ட வல்லம் ஒன்றியத்தில் கீழ்மாம்பட்டு கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கையில், ‘‘திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டுறவு துறை சார்பில் 1,931 புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 2,554 புதிய நியாய நிலை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கீழ்மாம்பட்டு கிராமத்தில் 1,300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நியாய நிலை கடை இருப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
