கடனை கேட்டு நிதி நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் விவசாயி தற்கொலை முயற்சி தமிழக அரசு இயற்றிய சிறப்பு சட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் வழக்கு: கைதான மேலாளர் சிறையிலடைப்பு

சென்னை: கடனை கேட்டு நிதி நிறுவனம் கட்டாயப்படுத்தி பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததால், விவசாயி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சிறப்பு சட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் எஸ்பி சாய்பிரனீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாட்டில் ஏழை மக்கள், பாதிக்கப்படக்கூடிய மக்கள், குறிப்பாக விவசாயிகள்.

பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பண கடன் வழங்கும் நிறுவனங்களால் ஏற்படும் துன்புறுத்தல் அல்லது கட்டாய மீட்பு முறைகளிலிருந்து பாதுகாக்க கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு பண கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல்) சட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின் 20வது பிரிவு கடன் வாங்கியவரிடமிருந்து கடன் வசூலிக்கும் போது எந்த ஒரு கடன் வாங்குபவரும் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களும் பண கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது என்று கூறுகிறது. இந்த சட்டத்தின் படி தமிழ்நாடு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய வழக்காகும்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லூரில் செயல்படும் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று ஒரு ஜேசிபி வாகனத்தை வாங்கியுள்ளார். அவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக மாதாந்திர தவணைகளை செலுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 13.2.2026ம் தேதி மீட்பு நிறுவனத்தின் மேலாளர் தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று கடன் தவணைகளை திருப்பி செலுத்துமாறு கூறி மீட்பு நிறுவனம் முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் பொல்லைன் வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர், அருகில் உள்ள ஒரு கொட்டகைக்குள் சென்று தன்மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.

தீயணைக்கப்பட்டு தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தின் அடிப்படையில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்) மற்றும் தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல்) சட்டம் 2025ன் பிரிவு 20 மற்றும் 21(வீவீ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் (மீட்பு முகமையின் மேலாளர்) 14.2.2026 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடன் வசூலிக்கும் அனைத்து நிறுவனங்களும் கடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடன் வழங்குபவர்களால் ஏதேனும் வற்புறுத்தல் அல்லது சட்டவிரோத வசூல் நடைமுறைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் காவல்துறையை அணுகி புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: