திருவனந்தபுரம்: ஆன்லைன் மோசடி தொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் ரூ. 39 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாதிக் ரஹ்மான். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் சேவ் பாக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆன்லைன் ஏல நிறுவனத்தை தொடங்கினார். இதே பெயரில் ஒரு செயலியையும் வெளியிட்டார். இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவரது புகைப்படத்துடன் ஏராளமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் சாதிக் ரஹ்மான் தன்னுடைய நிறுவனத்தின் பங்குகளை தருவதாக கூறியும், ஏஜென்சி நடத்த அனுமதி தருவதாக கூறியும் பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக் ரஹ்மானை கைது செய்தனர். இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதில் சாதிக் ரஹ்மானிடமிருந்து ஜெயசூர்யா ரூ.39 லட்சம் பணம் வாங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவி சரிதா ஆகியோரிடம் அமலாக்கத்துறை 2 முறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
