அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: பள்ளி கல்வித்துறையில் புதியதாக பணியில் சேர்ந்துள்ள 1061 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: பாடத்திட்டம் என்று பேசும்போது, எது மாணவர்களின் தேவையாக இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொடுப்பதைத்தாண்டி, எந்த வயது மாணவர்களுக்கு என்னென்ன தேவையோ அதையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே போனால் கண்டிப்பாக அந்த மாணவர்கள் பிளஸ் 2 படித்து முடிக்கும் போது இதை கற்றுக்கொண்டேன் என்ற நம்பிக்கையோடு செல்வார்கள். இல்லையென்றால் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்ததாக ஆகிவிடும். இந்த நிலை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

முதல்வர் சொன்னதுபோல நீங்கள் செய்வது பணியல்ல. அது ஒரு தொண்டு. இந்த சமுதாய வளர்ச்சிக்கு யார் காரணம். ஒரு நல்ல அரசாங்கம்தான். அதற்கு ஒரு நல்ல முதல்வர், ஒரு Visionary leader. எங்களின் vision இதுதான் என்று அவர் சொல்லும் போது, அதை உருவாக்குவது ஒவ்வொரு துறையின் வேலை. இந்திய நிலப்பரப்பில் 4 சதவீதம் இருக்கிறோம். மக்கள் தொகை அடிப்படையில் 6 சதவீதம் இருக்கிறோம். ஆனால் இந்தியாவுக்கு நமது பங்களிப்பு 9 சதவீதத்துக்கும் அதிகமான ஜிடிபி கொண்டுள்ளோம். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் கொண்டுள்ளோம். தமிழ்நாடு சூப்பர் ஸ்டேட் என்ற நிலையை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி பற்றி பேசும் போதெல்லாம் இருமொழிக் கொள்கையை உயர்த்திப்பிடித்த பேரறிஞர் அண்ணாவைத்தான் நினைக்கிறோம்.

ஒரு கி.மீ, 3 கி.மீ, 5 கிமீ என்ற இடைவெளியில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என உருவாக்கித் தந்தது முத்தமிழறிஞர் கலைஞர்தான். அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி செய்யாமல் அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி செய்வது நமது திராவிட மாடல் அரசு. நமது வளர்ச்சியை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்குகிறது. காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் வரை செயல்படுத்தியுள்ளோம். தமிழ்நாடு என்பது சமூகநீதிக்கான மண், எல்லாருக்கும் எல்லாம் என்பதை சமுதாயத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பு, ஆசிரியர்களான உங்களுக்கு உள்ளது. அதனால் மாணவர்கள் நன்றாக கற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். என்ற உயர்ந்த நோக்கில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: