திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவினர் ஒவ்வொருவரும் ஹாட்பாக்ஸ் மற்றும் தட்டு, சேலைகள் போன்றவற்றை வாங்கி இருப்பு வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்னோடியாக பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் இருந்து வருகிறார். ஜெயலலிதா பிறந்தநாள் வருகிற 24ம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவில் கொண்டாடாத அதிமுகவினர் இந்த ஆண்டு தேர்தல் என்பதால் பெரிதாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
பல்லடம் எம்எல்ஏ ஆனந்தன், தனது தொகுதி மக்களுக்காக ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை சின்னங்களுடன் 1 லட்சம் ஹாட்பாக்ஸ் ஆர்டர் கொடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பே வாங்கி வைத்துள்ளாராம். இவ்வளவு தொகை செலவு செய்து வாங்கி வைத்தும், தற்போது அவருக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் மீண்டும் பல்லடம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தே பரிசு பொருட்களை வாங்கி வைத்துள்ளார். ஆனால், இந்த முறை தனக்கு தான் சீட்டு வழங்க வேண்டும் என கரைப்புதூர் நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், திருப்பூர் தெற்கு தொகுதி மற்றும் வடக்கு தொகுதி என 2 தொகுதிகளிலும் சீட் பெற முயற்சி செய்து வரும் எம்.எஸ்.எம் ஆனந்தன், அந்த தொகுதிகளில் ஹாட் பாக்ஸ் வழங்கலாமா என யோசித்து வருகிறாராம். சீட் இன்னும் ஒதுக்கப்படாததால் எந்த தொகுதியில் நிகழ்ச்சி நடத்தி ஹாட் பாக்ஸ் வழங்குவது என குழம்பி போய் உள்ளாராம்.
