தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரப் படுத்த வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2013-17ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2022- 23-ஆம் கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 5,000 பேர் தற்காலிக ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல் முறையின் படியும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து மாதிரி வகுப்புகள் எடுத்து இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பணியில் சேர்ந்த காலக்கட்டம் கொரோனா காலகட்டத்தின் இறுதி காலம் என்பதால் அப்போது நிலவிய கடினமான நிதி நெருக்கடியின் காரணமாக 5 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இல்லாமல் கடினமான சூழ்நிலையில் பணியாற்றியுள்ளனர். பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றைய நாள் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் ஊதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் ஊதியமும் மதிப்பூதியம் என தரப்படுகிறது.
இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே மாதாமாதம் வழங்கப்படுவதில்லை. 5 மாதம், 3 மாதம், 2 மாதம் என காலம் கடந்துதான் வழங்கப்படுகிறது.

இந்த குறைவான சம்பளத்தை கூட மாதாமாதம் முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதால் இந்த ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள இவர்களது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். எனவே, கல்வித்துறை மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: