சவால்களைச் சந்திக்கும் ஆடை ஏற்றுமதி அமெரிக்கா வரி விதிப்பால் ஆடை ஏற்றுமதி 3.8% சரிவு: சலுகைகளை எதிர்பார்க்கும் ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர்: உலகளாவிய சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின் வரி உயர்வு காரணமாக இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் 3.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச்சூழல் மற்றும் அமெரிக்காவில் இறக்குமதி வரிகள் கடந்த 5 மாத காலமாக 50 சதவீதமாக இருந்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் போராட்டத்தைச் சந்தித்தனர்.

குறிப்பாக போட்டி நாடுகளுக்கு ஆர்டர்கள் செல்வதைத் தடுக்க சுமார் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் ஆடைகளை விற்பனை செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்க வரி விதிப்பு 18 சதவிகிதமாக குறைத்துள்ளது இந்தியாவின் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தாலும், அமெரிக்கா, வங்கதேசத்திற்கு அளித்துள்ள கூடுதல் சலுகைகள் இந்தியாவிற்கான போட்டியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீத வளர்ச்சியும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 1.6 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. இது உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய ஆடைத்துறை ஓரளவு முன்னேற்றம் அடைந்து வருவதை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிது.

இந்தியாவின் ஆடை ஏற்றுமதி 2024-25ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,606.4 அமெரிக்க மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1,544.8 அமெரிக்க மில்லியன் டாலர் என 3.8% சரிவடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியை 1,15,116 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,08,798 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது இதனை ஒப்பிடுகையில் 5.8% வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா வரி விதிப்பின் காரணமாக ஜனவரி மாத ஏற்றுமதி மட்டுமே சரிவை சந்தித்து இருந்தாலும் இனி வரும் காலங்களில் ஏற்றுமதி நிலையான வளர்ச்சி பெறும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏஇபிசி தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தச் சரிவு தற்காலிகமானது என்றாலும், சர்வதேசச் சூழல் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக அமெரிக்கா வரி விதிப்பு காரணமாக இந்த தற்காலிக சரிவு ஏற்பட்டது. இருப்பினும் 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீத வளர்ச்சியும், ஒட்டுமொத்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி வரையிலான காலத்தில் 1.6 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு நிதிச் சலுகைகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கான வட்டிச் சலுகையை 5 சதவீதமாக உயர்த்தவும், இதற்கான ரூ.50 லட்சம் உச்சவரம்பை நீக்கவும் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 37 நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் இந்தச் சரிவிலிருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை எட்ட முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: