சஹரன்பூர்: பாகிஸ்தானை சேர்ந்தவர் இக்பால் பட்டி. சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இக்பால் பட்டி உபி மாநிலம் சஹரன்பூரில் போலியான வாக்காளர் அடையாள அட்டை, பான் மற்றும் ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களுடன் வசித்து வந்தார். இந்த ஆவணங்களை வைத்த வங்கியின் கணக்கு துவக்க முயற்சித்தார். அப்போது வங்கி மேலாளர் அளித்த புகாரை தொடர்ந்து இக்பால் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு முக்கியமான சில ராணுவ ஆவணங்கள், வரைபடங்களுடன் பஞ்சாப்,பாட்டியாலாவுக்கு சென்றிருந்த இக்பாலை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் இக்பாலுக்கு 17 ஆண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை காலம் கடந்த மார்ச்சில் முடிந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்பால் பட்டியை வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர் என்று சஹரன்பூர் கூடுதல் எஸ்பி மனோஜ் யாதவ் தெரிவித்தார்.
