- அசாம் காங்கிரஸ்
- பாஜக
- குவஹாத்தி
- பூபன் குமார் போரா
- முதல் அமைச்சர்
- ஹிமந்தா பிஸ்வா சர்மா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அசாம்
கவுகாத்தி: அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபேன் குமார் போரா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளில் அவரது வீடு தேடி சென்று பா.ஜவில் இணையுமாறு முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா அழைத்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அசாமுக்கும் வரும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்றுமுன்தினம் காலை அறிவித்தார்.
அசாமில் 2 முறை எம்எல்ஏ ஆக இருந்த போரா, கடந்த 2021 முதல் 2025 வரை அசாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் ராஜினாமா அறிவித்தவுடன் அசாம் மாநில பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், உடனடியாக போராவை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்தினார். பின்னர் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், போரா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
அதே சமயம் போரா ராஜினாமா செய்ததாக அறிவித்ததும், அவருக்காக பாஜவின் கதவுகள் திறந்திருப்பதாகவும், பாஜவில் போரா சேர்ந்தால் உடனடியாக அவருக்கு சீட் தரப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா நேரடியாக அறிவித்தார். இதை தொடர்ந்து நேற்று மாலை கவுகாத்தி கோரமாரா பகுதியில் உள்ள போராவின் இல்லத்திற்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சென்றார்.
அங்கு போராவின் மனைவி மற்றும் மகன் ஆரத்தி எடுத்து முதல்வர் ஹிமந்தாவை வரவேற்றனர். அங்கு போராவை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய முதல்வர் சர்மா கூறுகையில்,’ மூத்த தலைவர் போரா வரும் 22ஆம் தேதி முறைப்படி பா.ஜவில் இணைவார்’ என்று அறிவித்தார்.
* மேலும் ஒரு காங். எம்எல்ஏ ஓட்டம்
அசாம் மாநிலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஷெர்மன் அலி அகமது, அகில் கோகாய் தலைமையிலான ரைஜோர் தளத்தில் இணைந்தார். பாக்போர் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வான ஷெர்மன் அலி அகமதுவை, பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள கல்காச்சியாவில் நடந்த நிகழ்ச்சியில் அகில் கோகோய் தனது கட்சியில் இணைத்தார். கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வான அப்துர் ரஷீத் மண்டல், திங்களன்று ரைஜோர் தளத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
