சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 9வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்த ஊதியம் ரூ.57,700 வழங்க வேண்டும், 11 மாதங்கள் வழங்கப்படும் ஊதியத்தை 12 மாதங்களாக நீடித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் நேற்று கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணியையும், மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்களுக்கான பணிகளையும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
