2024-25ம் நிதியாண்டில் 118 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்ட சிறு துறைமுகங்கள்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் சிறுதுறைமுகங்களில் திறன்மேம்பாடு செய்யப்பட்டு, சரக்கு கையாளுதல் படிப்படியாக உயர்ந்து, 2024-25ம் நிதியாண்டின் இறுதியில் சுமார் 118 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 5வது தளத்தில் உள்ள கூட்டரங்கில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98வது வாரியக் கூட்டம் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கன்னியாகுமரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக, புதிதாக 3 படகுகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதில், பெருந்தலைவர் காமராசர் என்று பெயரிடப்பட்ட படகு கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. 2018-19ம் நிதியாண்டின் இறுதியில், 12 லட்சம் மெட்ரிக் டன்கள் கையாண்ட தமிழ்நாட்டின் சிறுதுறைமுகங்களில் திறன்மேம்பாடு செய்யப்பட்டு, சரக்கு கையாளுதல் படிப்படியாக உயர்ந்து, தற்போது கடந்த நிதியாண்டின் (2024-25) இறுதியில் சுமார் 118 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயலாளர், துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல்அலுவலர் வெங்கடேஷ், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் அன்பரசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: