திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் விஜய் என்னும் மண்குதிரையை நம்ப யாரும் தயாராக இல்லை: – நடிகர் மன்சூர் அலிகான்

1. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் எப்படி உள்ளது? யாருக்குச் சாதகமாக உள்ளது?
தேர்தல் களம் சிறப்பாக உள்ளது. மக்களின் வாழ்வுரிமையை எல்லாம் டிரம்பிடம் அடமானம் வைத்துள்ள பாஜவிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றத் திமுக தலைமையிலான கூட்டணி தான் ஜெயிக்க வேண்டும். விவசாயிகள், நெசவாளிகள் என எல்லோரின் நலன்களையும் அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு சோமாலியா போன்று இந்தியாவை மாற்றப் பார்க்கும் பாஜவிடமிருந்து காப்பாற்ற தமிழகத்தில் ஸ்டாலினின் கரத்தையும், ஒன்றியத்தில் ராகுலின் கரத்தையும் பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதுதான் எனது கணிப்பு.

2. தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?
ஆட்சியில் பங்கு கேட்பது இப்போது தேவையில்லாத விஷயம். முதலில் நின்று ஜெயித்துக் காட்டுங்கள். மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ராகுல் காந்தி தனியாகப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முதலில் அவருக்கு வலிமை சேர்க்க போராட்டம் நடத்துங்கள். பிறகுதான் ஆட்சியில் பங்கு கேட்க அருகதை இருக்கும்.

3. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் குறித்த உங்களின் மதிப்பீடு என்ன? தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தமிழக வெற்றிக் கழகத்தால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இன்னமும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அறிஞர் அண்ணா 25 ஆண்டு காலம் எளிமையாக இருந்து பேசிப் பேசி மக்களை அரசியல்படுத்தினார். இவர் வானத்திலேயே வட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சித்தாந்தம் இல்லாமல், சும்மா தீய சக்தி என்று சொல்கிறார். பெரிய தீய சக்தி பாஜ தான். ஆனால் அதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. விஜய் நல்ல நடிகர்; ஆனால் அவர் நோக்கத்தில் அறிவுமுதிர்ச்சியோ தெளிவோ இல்லை. எல்லாமே சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது; இரண்டு சதவீத வாக்குகள் தான் பெறுவார்கள். இங்கு உள்ள அரசியல் அவருக்கு இன்னமும் புரியவில்லை. தமிழ்நாட்டைச் சீர்திருத்த வேண்டுமென்றால் 10 வருடமாவது மக்களுடன் போராடிவிட்டு, பிறகு தான் வர முடியும். மேலோட்டமாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று சொல்வதெல்லாம் நடக்காது.

4.தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்தும் அவருடன் யாரும் கூட்டணி வைக்காதது ஏன்?
விஜய் தனித்துவிடப்பட்டார். விஜய் எனும் மண்குதிரையை நம்பி யாரும் ஆற்றில் இறங்கத் தயாராக இல்லை. விஜய்க்கு இளைஞர்கள், ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. ஆனால் அவை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது. அதற்கான ஆற்றலும் படைபலமும் அவரிடம் இல்லை.

* ஏப்.9க்கு பிறகு தான் 5 மாநில தேர்தல்
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் மே 10 வரையும், அசாம் பதவிக்காலம் மே 20, கேரளா பதவிக்காலம் மே 23, மேற்குவங்க பதவிக்காலம் மே 7, புதுச்சேரி பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளது. எனவே மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இங்கு முதற்கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் நடந்தன. அசாம் மாநிலத்தில் இறுதிப்பட்டியல் பிப்.10ஆம் தேதியும், புதுச்சேரியில் பிப். 14ஆம் தேதியும் வெளியாகி விட்டன.

தமிழ்நாட்டில் பிப்.23, கேரளாவில் பிப்.21, மேற்குவங்கத்தில் பிப்.28ஆம் தேதி வெளியாக உள்ளது. முதற்கட்டமாக அசாம் மாநிலத்தில் தேர்தல் கமிஷனர்கள் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஏப்.9ஆம் தேதிக்கு பிறகுதான் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் இறுதித்தேர்வு ஏப்.9 அன்று நடைபெறுகிறது. எனவே அதன்பிறகுதான் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என்றும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரு கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு கட்டமாகவும், மேற்குவங்கத்தில் பலகட்ட தேர்தல் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: