தங்களை தாங்களே வேட்பாளராக அறிவித்தால் நடவடிக்கை; தேர்தலில் தோற்றால் கட்சிப் பதவி காலி: கேரள காங். தலைவர்களுக்கு மேலிடம் கட்டுப்பாடு

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக தங்களை தாங்களே அறிவித்துக் கொள்ளும் நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என காங்கிரஸ் மேலிடம் எச்சரித்துள்ளது. கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் முன்னெடுப்பில் 50 சதவீதம் இடங்களை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேரை தேர்வு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற விதியிலிருந்து கே.சுதாகரன், எம்.கே.ராகவன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோருக்கு மட்டும் சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பினராயி விஜயன் தலைமையிலான அரசை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தற்போதே விவாதிக்க வேண்டாம் என்றும் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ஒரு தொகுதியில் தாங்கள் தான் வேட்பாளர் என்று சுயமாக அறிவித்துக் கொள்ளும் நபர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடையும் நபர்களுக்கு எதிர்காலத்தில் கட்சியில் எந்த பொறுப்புகளும் வழங்கப்படாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். எந்தவிதமான பரிந்துரைகளோ அல்லது உள்ளூர் தலைவர்களின் நெருக்கடிகளோ வேட்பாளர் தேர்வில் எடுபடாது’ என்றார்.

Related Stories: