அதிமுக என்பது முகமூடி; ஒரிஜினல் முகம் பாஜ: ப.சிதம்பரம் ஆவேசம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி காங்.வேட்பாளராக மாங்குடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் காரைக்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: இந்த தேர்தல் ஒரு புதுமையான நிகழ்வு என எச்சரிக்க விரும்புகிறேன். திமுக தலைமையில் ஒரு அணி உள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள். கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக என பல கட்சிகள் உள்ளன. இது நமக்கு பழக்கமாக, விருப்பமான அணி. அந்த அணி எப்படி நடந்து கொள்ளும், எப்படி தேர்தல் பிரசாரம் செய்யும். எந்த நோக்கத்திற்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள், ஆட்சிக்கு வந்தால் திமுக என்ன செய்யும் என நமக்கும் பல தேர்தல்களாக பல ஆண்டுகளாக பழகி விட்டது.

அதிமுக அணியும் நமக்கு தெரிந்த அணிதான். அதிமுக தலைமையில் அதில் சில கட்சிகள் சேரும். அந்த கட்சியின் ஆட்சி எப்படி இருக்கும், அவர்கள் எதை பேசுவார்கள் என நமக்கு தெரியும். இந்த தேர்தலில் என்ன புதுமை என்றால் பாஜ ஏற்கனவே அதிமுக அணியில் இருந்தாலும் பாஜ பின்வரிசையில் இருந்தது. ஆனால் தற்போது பாஜக முன்வரிசைக்கு வந்து அதிமுக பின்வரிசைக்கு போய் விட்டது. யூஸ் அண்டு துரோ என்பார்கள். காகித கப், காகித அட்டை என்றால் தூக்கி போட்டு விடுவோம். அது போலத்தான் பாஜ பல மாநிலங்களில் யூஸ் அண்டு துரோ செய்யும்.

முதலில் அரியானாவில் இதனை முயற்சி செய்தார்கள். இரண்டு கட்சிகளை இணைத்து தேர்தலில் நின்றார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிந்துவிட்டு அரியானாவில் அவர்களே ஆட்சி செய்கிறார்கள். அடுத்தது ஒரிசாவில் நவீன் பட்னாயக் கட்சியுடன் சேர்ந்து கொண்டு அவரை முதல்வராக ஆக்கினார்கள். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து தற்போது நவீன் பட்னாயக் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு அவர்களே ஆட்சி செய்கிறார்கள். அண்மையில் பீகாரில் 9 முறை முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கி நீங்கள் டில்லியில் போய் ஓய்வு எடுங்கள் என கூறிவிட்டு அவர்கள் முதல்வராக வந்து உள்ளார்கள்.

பாஜவின் பழக்கம் என்னவென்றால் மாநில கட்சிகள், சிறிய கட்சிகளை யூஸ் அண்டு துரோ செய்வது. பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடுவார்கள். அதுபோல யூஸ் அண்டு துரோ என அதிமுக வை பாஜ எறிந்துவிடுவார்கள். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என கூறுவார்கள். அதுபோல பாஜ நுழைந்த இடமும் உருப்படாது. அதிமுக, இன்று பாஜவிற்கு அடிமைச்சீட்டு எழுதி கொடுத்துவிட்டு அவர்கள் கிழித்த கோட்டை தாண்ட முடியாமல் இருக்கிறது. அதிமுக என்பது முகமூடி. அந்த முகம் பாஜவின் முகம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: