அசாமில் பரபரப்பு காங். முன்னாள் தலைவர் போரா ராஜினாமா வாபஸ்: ஒரே நாளில் அடுத்தடுத்து திருப்பம்

கவுகாத்தி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அசாமுக்கும் வரும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று காலை அறிவித்தார். அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதற்கிடையே, அசாம் மாநில பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், உடனடியாக போராவை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்தினார். பின்னர் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், போரா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக ஜிதேந்திர சிங் அறிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய், ‘‘ராகுல் காந்தியுடன் போரா பேசினார். அவரது ராஜினாமாவை உயர்மட்ட குழு ஏற்கவில்லை. கட்சியில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக போரா வேதனை அடைந்திருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார். இதன் காரணமாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய கட்சி தலைமையிடம் நேரம் கேட்டிருப்பதாக போரா தெரிவித்தார். இந்த விவகாரம் அசாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போரா ராஜினாமா செய்ததாக அறிவித்ததும், அவருக்காக பாஜவின் கதவுகள் திறந்திருப்பதாகவும், பாஜவில் போரா சேர்ந்தால் உடனடியாக அவருக்கு சீட் தரப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா நேரடியாக அறிவித்தார்.

Related Stories: