திருவனந்தபுரம்: கேரளாவில் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைகளில் குறிப்பிடத்தக்கது சித்திரை விஷு பண்டிகை ஆகும். மலையாள மாதமான மேடம் முதல் நாள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படும். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட தென் மாவட்டங்களை விட கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் தான் இந்தப் பண்டிகை அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் தான் பெரும்பாலும் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
இந்தப் பண்டிகையை முன்னிட்டு வீடுகள் மற்றும் கோயில்களில் விஷுக்கணி தரிசனம் நடைபெறும். பூஜை அறையில் காய் கனிகள், காய்கறிகள், கொன்றைப்பூ, புத்தாடை, நகைகள் உள்பட பொருட்களை வைத்து அலங்கரித்து அதிகாலையில் அதில் கண்விழிப்பது விஷுக்கணி தரிசனம் என அழைக்கப்படுகிறது. இந்த வருட சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சபரிமலை, குருவாயூர் கிருஷ்ணன் கோயில், பத்மநாபசுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் விஷுக்கணியை தரிசிப்பதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
