சென்னை: வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. 2 மாதங்களுக்குள் தமிழ்நாட்டு மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செ ன்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான 3,000 ரூபாயை மொத்தமாக வழங்கி, 1 கோடியே 32 லட்சம் பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளார்.
‘‘2,000 ரூபாய் தரப்போகிறேன்\\” என்று வாய் சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வாயை, சொன்னதைச் செய்து காட்டும் நம் முதல்வர் இன்றைக்கு தைத்து விட்டார். இந்தத் தொகையை அறிவித்து விட்டு வழங்கினால், எதிர்க்கட்சிகள் உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு வாங்கி விடுவார்கள் என்பதால், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த பயன் தடையின்றிச் சேர வேண்டும் என இன்று (நேற்று) காலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வழங்கியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே தமிழ்நாட்டு மக்களுக்கு 9,000 ரூபாய் கிடைத்திருக்கிறது; வரலாற்றிலேயே எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில், தேர்தலுக்கு முன்பே வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் ஆட்சி நம் தலைவரின் ஆட்சி. மூன்று மாதங்களுக்கு தலா 1000 ரூபாய் தந்து 2000 ரூபாய் போனஸாக தந்திருக்கிறார் நம் முதல்வர். பெரிய கார்ப்பரேட்டுகளுக்காகக் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பொதுத்துறை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்த ஒன்றிய பாஜ அரசு, பெண்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் மீது மட்டும் வன்மத்தை காட்டுகிறது.
பெண்களுக்கு வழங்கப்படும் பணம் அப்படியே டாஸ்மாக் கடைகள் மூலம் திரும்ப வசூலிக்கப்படுகிறது என்று கூறி தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்துவதுதான் பாஜவின் தொழிலாக இருக்கிறது. அதிமுகவும் இந்த வன்மத்தைத் தான் கக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பெண்கள் தங்கள் கையில் 5,000 ரூபாய் நோட்டுகளை காண்பித்து, மகிழ்ச்சியோடு கடைவீதிக்குச் செல்லும் காட்சியை நாம் காண்கிறோம்.
இத்திட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜ மற்றும் அதிமுகவினர், சட்டமன்றத் தேர்தலை சாக்காக வைத்து நீதிமன்ற வழக்குகள் மூலம் முடக்கச் சதி செய்தனர். விடியல் பயணத் திட்டம் சாத்தியமில்லை என்றும், பஸ் ஓட்ட முடியாது, டயர் வாங்க முடியாது என்றும் எள்ளி நகையாடிய எடப்பாடி பழனிசாமியின் கூற்றுகளைப் பொய்யாக்க போல முதல்வர் இதைச் சாதித்துக் காட்டியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, ‘‘தேர்தல் நேரத்தில் தான் கோடை கால நிதி வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல புரட்சிகரமான திட்டங்கள், கல்வி மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். திட்டங்களை முடக்கச் சதி நடந்தாலும், அதை எதிர்த்துப் போராடி வெல்வோம்’’ என்றார்.
