×

கரூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அதிமுக மாஜி அமைச்சர் மீது வழக்கு: பறிமுதல் செய்ய முயன்றபோது போலீசுடன் தள்ளுமுள்ளு

கரூர்: மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த முனியப்பனூர் காவிரி ஆற்றுக்கு கடந்த 11ம்தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வந்து, அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த லாரி மற்றும் 2 பொக்லைன் மற்றும் 5 மணல் அள்ளும் வாகனங்களை சிறைபிடித்தனர். தகவலறிந்ததும் மண்மங்கலம் தாசில்தார் சத்தியமூர்த்தி சென்று லாரி, இயந்திரங்களை கைப்பற்றி வாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி முனியப்பனூரை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘இங்கு முறையான அனுமதியுடன் தான் மணல் அள்ளப்படுகிறது. தேர்தல் வருவதால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளம்பரத்துக்காக இவ்வாறு செய்கிறார். இதனால் எங்களது தொழில் பாதிக்கப்படுகிறது’’ என்று வேதனையுடன் கூறினர். இந்நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருங்கிய ஒருவர் வீடுகளில் மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மணலை, பறிமுதல் செய்ய வேண்டுமென விஜயபாஸ்கர் வீட்டுக்கு செல்லும் வழியான கரூர்-கோவை சாலையில் 20 மாட்டு வண்டிகளுடன் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 11ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆண்டாங்கோவில் புதூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான இடத்தில் 12 யூனிட் ஆற்று மணல் கொட்டப்பட்டு உள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை.

எனவே மணலை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நகர போலீசில் ஆண்டாங்கோவில் கிழக்கு விஏஓ சண்முகம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். நேற்று முன்தினம் விஜயபாஸ்கர் வீட்டின் அருகே சாமியாத்தாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 100 யூனிட் மணல் கொட்டப்பட்டிருந்தது.

அந்த மணலை சாமியாத்தாள் மருமகனும், ஆண்டாங்கோவில் புதூர் அதிமுக கிளை செயலாளருமான தனபால் ஆவணங்களின்றி கொட்டி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தனபால் வீட்டிற்கு சென்றனர். அவர்களை அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிகாரிகளுக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதைதொடர்ந்து அங்கிருந்த 100 யூனிட் மணலை வருவாய்த்துறை மற்றும் கணிமவளத்துறையினர் எடுத்து சென்றனர். மேலும் தனபால் மீது போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags : Minister ,Maghi Maji ,Karur ,Former ,M. Karur ,R. Vijayabaskar ,M. R. ,Commissioner ,Vijayabaskar ,
× RELATED தமிழக தேர்தல் பணிக்கு கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்