×

தீயாய் பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்…!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதத்தில் நடக்கலாம் என்ற நிலையில், மார்ச் துவக்கத்திலேயே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும் சூழலிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இப்போதே காவல்துறை துவங்கி பலதரப்பட்ட துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் துவங்கி விட்டது. எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய அரசு வாகனங்கள், போன் இணைப்பு போன்றவை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசுத்துறை அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் உருவப்படங்கள் அகற்றப்படும். தேர்தல் மேற்பார்வையாளர், அவர் சார்ந்த பணியாளர்கள், இசட் பிரிவு பாதுகாப்புக்குரிய தனி நபர்களுக்கே அரசு விடுதிகளில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அறைகள் ஒதுக்கலாம். இதேபோல் வங்கிகளில் அதிகளவில் பணப்பரிமாற்றம் நடத்துவது கண்காணிக்கப்படுவதுடன், கூடுதல் தொகையை, பொருட்களை உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்வதும் கடுமைப்படுத்தப்படும்.

இப்படி பலதரப்பட்ட பணிகளையும் விரைந்து முடிக்கும் கட்டாயத்தில் அதிகாரிகளுடன், பொதுமக்களும் பரபரப்பான செயல்பாடுகளைத் துவக்கி பம்பரமாக இயங்க ஆரம்பித்துள்ளனர். வீடு, நிலம் வாங்குவோர் துவங்கி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவிடுதல் வரை தாங்கள் தாமதமாக மேற்கொள்ளலாம் என்ற பணிகளையும் கூட இப்போதே வேகப்படுத்தியுள்ளனர். பணி இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்தும் அதிகாரிகள் தயாராக காத்திருக்கின்றனர்.

இப்போதே கட்சியினர் வாக்கு சேகரிப்பிற்கு விளம்பரப்படுத்த சுவர்கள், பேனர்கள் கட்டும் பகுதிகள் என இடம் பிடிப்பதில் அதிக அக்கறை காட்டத்துவங்கி விட்டனர். 1959ம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளி விளம்பரச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அவரது அனுமதியில்லாமல் கொடி, பேனர் கட்டுதல், பேனர் வைத்தல், பிரசுரங்கள் ஒட்டுதல்,

வாசகங்கள் எழுதுவது போன்றவற்றிற்கும் தடை இருக்கிறது. எனவே தங்கள் பகுதியின் ஹவுஸ் ஓனர்களைப் பார்த்து முன்னதாகவே அனுமதி பெற்று இடங்களை ‘ரிசர்வ்’ செய்வதிலும் அந்தந்த கட்சிகள் தனித்தீவிரம் காட்டி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு துவங்கி, தேர்தல் காலத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் தங்களை அவரவர் சூழலுக்கேற்ப தயார்ப்படுத்தி காத்திருக்கின்றனர்.

Tags : Tamil Nadu ,
× RELATED மனமகிழ் மன்றம் செயல்பட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு