×

மனமகிழ் மன்றம் செயல்பட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை விரகனூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. மதுரை விரகனூர் ரவுண்டானா அருகே தேசிய நெடுஞ்சாலையில் மனமகிழ் மன்றம் நடத்தப்படுகிறது, இதனால் அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

மனமகிழ் மன்றத்திற்கான விதிகளை மீறி செயல்படுகிறது. எனவே, இந்த மனமகிழ் மன்றம் செயல்படத் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் உதயகுமார் ஆஜராகி, ‘‘மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட வேண்டும்.

உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது. ஆனால், மனமகிழ் மன்றங்கள் உரிமை பெற்றவர், டாஸ்மாக் கடை நடத்துவது போல் விளம்பர போர்டு மற்றும் பார் வைத்து மது விற்பனை நடைபெறுவது சட்டவிரோதம். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மனமகிழ்மன்றம் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Manamagizh Mandarma ,Madurai ,Prabhakaran ,Viraganur ,High Court ,
× RELATED தமிழக தேர்தல் பணிக்கு கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்