சென்னை விமான நிலையத்தில் தவெக இணை பொது செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் பேசுவது தான் நயினார் நாகேந்திரனின் பழக்கம். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு, இவர் பேசுவது கண்டனத்திற்குரியது. என்ன பேசுவது என்று தெரியாமல், நயினார் நாகேந்திரன் பேசுகிறார். அவர்கள் அனைவரும், தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை.
அவர்களை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் எந்த இடத்திலும் ஒரு ஓட்டு கூட வாங்கப் போவதில்லை. நோட்டாவுக்கு கீழே இருந்தவர்கள், இப்போது அதைவிட கேவலமான தோல்வியை சந்திப்பார்கள். நயினார் நாகேந்திரன் அரசியல்வாதியாக இல்லை, தொழிலதிபராகவே இருக்கிறார். அவரை பண்ணையார் என்று சொல்கிறார்கள். அவர் ஹோட்டல் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். அவர் அரசியல்வாதியாக, முயற்சி செய்து கொண்டிருக்கும் நபராகவே இருப்பார்.
தவெக பற்றியும் தவெக தலைவர் விஜய் பற்றியும், அநாகரிகமாக பேசும் இது போன்ற பேச்சுகளை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். 20, 30 ஆண்டுகள் அரசியல் செய்து நோட்டாவுக்கு கீழே, ஓட்டு வாங்கிய ஒரு தேசிய கட்சி உள்ளதா? எங்கள் தலைவரை பார்த்து பயப்படுகிறது. டைம் பாஸ் பண்ணுவதற்காக, கட்சி ஆரம்பிக்கவில்லை. கூட்டங்களை எவ்வளவு பாதுகாப்பாக நடத்த வேண்டுமோ? அப்படி தான் நடத்துகிறோம். இரவு நேரங்களில் மக்கள் வெளியேறுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தான், பகலில் கூட்டம் நடத்துகிறோம்.
ஒரு பாக்ஸில் 500 பேர் என்றால், அதில் பாதி பேரைத்தான் அனுமதிக்கிறோம். சூரஜ் உயிரிழந்த தகவல் கிடைத்து, அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. மதியம் ஒரு மணி அளவில் அவருக்கு தேவையான முதலுதவி, ஆம்புலன்ஸ், மருத்துவ உதவி அனைத்தும் அளிக்கப்பட்டது. ஆனாலும் பலன் இல்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
