நியூயார்க்: இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்து வெள்ளை மாளிகை அறிக்கை வௌியிட்டுள்ளது. இந்தியா, அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பை அதிபர் டிரம்ப் கடந்த வாரம் வௌியிட்டார். இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் நேற்று முன்தினம் இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சுருக்க அறிக்கையை அமெரிக்கா வௌியிட்டது. அதில், “அமெரிக்காவுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்யமாக்க இந்திய ஒப்பு கொண்டுள்ளது” என டிரம்ப் கூறியது தௌிவுப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக, அமெரிக்க தொழில்துறை பொருள்கள், உணவு, விவசாய பொருள்கள், குறிப்பாக அதிக புரதம், ஊட்டச்சத்து மிக்க கால்நடை தீவனங்கள், சிவப்பு சோளம், மரக்கொட்டைகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சில பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் மீதான வரியை முழுமையாக நீக்கவும், குறைக்கவும் இந்தியா ஒப்பு கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்து வெள்ளை மாளிகை நேற்று புதிய அறிக்கை வௌியிட்டது.
உண்மைத்தாள் என்ற பெயரில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா உறுதி அளித்துள்ளது என்ற வார்த்தை உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது. தற்போது வௌியாகியுள்ள அறிக்கையில், இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய பொருள்களின் பட்டியலில் இருந்து விவசாயம் சார்ந்த பொருள்கள்என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரி குறைக்கப்பட வேண்டிய பொருள்கள் பட்டியலில் இருந்து சில பருப்பு வகைகளின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்ற நேரடி வாக்கியம் நீக்கப்பட்டு, தற்போது டிஜிட்டல் வர்த்தக விதிகள் பற்றி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்பு வௌியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவிடம் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பில் எரிசக்தி பொருள்கள், விமானம், விமான உதிரி பாகங்கள், விலை மதிப்பில்லா உலோகங்கள், தொழில்நுட்ப சரக்குகள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய இந்தியா உறுதி அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது இந்தியா வாங்க விரும்புகிறது (அ) உத்தேசித்துள்ளது என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் புதிய அறிக்கையால் இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றிய குழப்பங்களும், சர்ச்சைகளும் அதிகரித்துள்ளன.
* வாஷிங்டன்னில் உள்ள மோடியின் நண்பர் திருடியது – காங். கடும் விமர்சனம்
இதனிடையே இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி மோடி அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “இந்த ஒப்பந்தம் வாஷிங்டன்னில் உள்ள பிரதமர் மோடியின் நல்ல நண்பர் திருடியது. இது இந்திய அரசியல் அரவணைப்பு, ராஜதந்திரத்தின் மிக மோசமான தோல்வி. இந்த ஒப்பந்தம் பற்றிய அமெரிக்காவின் புரிதல் பிரதமர் மோடி அரசாங்கத்தால் வௌியிடப்படும் பிரசாரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மோடியும், அவரது பொய்படைகளும் என்னதான் சொன்னாலும், அமெரிக்கா ஒப்பு கொண்டதைவிட இந்தியாவிடமிருந்து அதிகமாக பிரித்தெடுத்துள்ளது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
