×

தென் மாவட்ட வாக்குகளை பிரிக்க புது கூட்டணி: எடப்பாடி, டிடிவி.தினகரனை பழிவாங்க துடிக்கும் சசிகலா; 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு; ஓபிஎஸ்சும் ஆதரவு? விஜய்யை சந்தித்து பேசிய திவாகரன்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் தினமும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கி விட்டதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருந்து வருகிறார். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பாஜ விரும்பினாலும் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் கைகோர்த்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகிய இருவரையும் அரசியல் ரீதியாக வீழ்த்த சசிகலா புதிய வியூகம் வகுத்துள்ளதாக பேசப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்க வேண்டும் என்ற ஆசை சசிகலாவுக்கு இருந்தது. ஆனால், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் சட்ட நடவடிக்கைகள், அவரது அரசியல் பயணத்திற்கு ஒரு வகையில் தடையாக அமைந்தன. இதனால் நேரடியாக அரசியலில் முன்வராமல், பின்னணியில் இருந்து இயக்கும் அரசியலை அவர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தன்னை பழிவாங்கிய எடப்பாடி பழனிசாமி மீது தீராத கோபத்தில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை வீழ்த்தும் வகையில் தற்போது திரைமறைவாக இருந்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசூரில் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். அப்போது, என் ஆதரவில்லாமல் தமிழகத்தில் அடுத்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அவர் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள சசிகலா, அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இதையடுத்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனிக்கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் பிப். 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ‘அம்மா அதிமுக’ என்ற கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனிக்கட்சி துவங்கிய பின், தவெகவுடன் கூட்டணி வைக்க சசிகலா முடிவு செய்துள்ளாராம்.

இதற்கிடையே, பாஜ தலைமை அளித்த அழுத்தத்தால் அமமுகவை மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் தனிமரமாகிவிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்துக்காக பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதோடு, அந்த விவகாரத்தை பேசுபவர்களையும் எடப்பாடி பழனிசாமி புறம் தள்ளினார். மேலும், தன்னை சந்தித்ததற்காக பெண் நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை அமமுகவில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன் மீதும் சசிகலா மிகுந்த கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, அதிமுகவில் தன்னை சேர்க்காத எடப்பாடி பழனிசாமியையும், தனது எதிராக செயல்படும் டிடிவி தினகரனையும் ஒரே நேரத்தில் வீழ்த்துவதற்கான வியூகத்தை சசிகலா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக, தனது சகோதரர் திவாகரன் பொதுச்செயலராக உள்ள அண்ணா திராவிடர் கழகம் கட்சியை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக திவாகரன், விஜய்யை சந்தித்து பேசி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கட்சி தொடங்கிய பின், தம்பி திவாகரன் கட்சியையும் சேர்த்து தவெகவுடன் கூட்டணி வைத்து தென் தமிழகத்தில் சுமார் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிமுக மற்றும் அமமுகவின் வாக்குகளைப் பிரித்து, அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக திருமங்கலம் தொகுதியில் சசிகலா நேரடியாக களம் இறங்க உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால்தான் புதிய கட்சி விழாவையும் மதுரையில் நடத்த சசிகலா திட்டமிட்டுள்ளார். தினகரன், தனக்கு துரோகம் செய்து விட்டதாக சசிகலா கருதுகிறார்.

எனவே அமமுகவை உடைத்த அவர் திட்டம் வகுத்துள்ளாராம். அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கு பலர், சசிகலா கட்சியில் இணைய சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். அதேபோல் அதிமுக மாஜி அமைச்சர்கள் சிலரிடமும், சசிகலா பேசி உள்ளாராம். சசிகலா கட்சி ஆரம்பித்த பின், அமமுக உடையும். அதிமுகவில் இருந்தும் பல மாஜி அமைச்சர்கள், சசிகலாவுடன் சேருவார்கள் என்று சசிகலா தரப்பில் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் அமமுக மட்டுமின்றி அதிமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களுக்கு எதிராக இருக்கும் நபர்களை பழி வாங்கும் விதமாக தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவர்களை தோற்கடிப்பது தான் சசிகலாவின் திட்டம் எனவும், அதனால் தான் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைத்திருக்கிறார் என்றும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

* யார், யார்? எங்கெங்கே?
எடப்பாடி மற்றும் டிடிவிக்கு எதிராக வியூகம் வகுத்து உள்ள சசிகலா, தென்மாவட்டங்களில் நேரடியாகவே அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாஜி அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக சமீபத்தில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜீவிதா நாச்சியாரை நிறுத்துவது, உசிலம்பட்டியில் தற்போதைய எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஐயப்பனை நிறுத்தி ஆதரித்து வேலை செய்வது அல்லது தானே (சசிகலா) அங்கு ேபாட்டியிடுவது என சசிகலா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதியில் இருக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகள் தனக்கு சாதகமாக இருக்கும் என சசிகலா நினைக்கிறார். அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவதுதான் சசிகலாவின் முதல் சாய்ஸாக உள்ளது.

அதிமுகவிற்கு என தனித்த செல்வாக்கு இருந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நின்று தனது செல்வாக்கை பல்ஸ் பார்க்கலாம் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த தொகுதியில் அதிமுக – பாஜ கூட்டணியில் டிடிவி.தினகரன் தனது மனைவியை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில் தனது குடும்பத்தைச் சேர்ந்தவரை எதிர்த்து போட்டியிடலாமா என்ற சிந்தனையும் சசிகலாவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அல்லது திருப்புத்தூர் தொகுதியில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் காண வைக்கவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அல்லது ராமநாதபுரம் தொகுதியிலும் தனது சார்பில் வேட்பாளரை நிறுத்தவும் சசிகலா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முறையாக தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், இது தொடர்பான முடிவை சசிகலா வெளியிடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Tags : Edappadi ,TTV ,Sasikala ,Dhinakaran ,OPS ,Vijay ,Tamil Nadu ,AIADMK ,BJP ,Chief Minister ,Jayalalithaa… ,
× RELATED திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ,...