×

அரசியல் கல்லடியால் சாய்ந்த பழுத்த மரம்: மகனிடம் தோற்ற தந்தை; அன்புமணிக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்க ராமதாஸ் திட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கட்சி, சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி இருவரும், டெல்லி உயர் நீதிமன்ற கதவுகளை தட்டினர். இதில், தற்போதைய நிலையில் உள்ள ஆவணங்களின்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால், அன்புமணிக்கு தரப்புக்கே சாதகம் ஏற்பட்டுள்ளது. அவரே பாமகவின் தலைவர், சின்னமும் அவருக்கே தேர்தல் ஆணையம் வழங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, பாஜவின் ஆதரவோடு அன்புமணியின் கை ஓங்கிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை அவர் ஐக்கியப்படுத்தியதால் பாமக மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்குதான் என்பதில் அவரது தரப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

பழுத்த மரம்தான்தான் கல்லடி படும் என்பதுபோல், அரசியலில் மகனிடம் தந்தை தோல்வியடைந்ததால் தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, தங்களது தரப்பில் ஆட்களை நிறுத்துவதற்காக புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு ராமதாஸ் தரப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸ் பாமக கட்சியின் தலைமை நிலைய செயலாளராக உள்ள அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. பாமகவின் பெயர், வண்ணம், கொடி ஆகியவற்றை பிரதிபலிக்கக் கூடிய வகையில், ஏற்கனவே இருக்கும் பாமக கொடியில் ராமதாஸின் முகத்தை மட்டும் பதித்து புதிதாக கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளதாக கூறப்படுகின்றன. ஆனால் இதுபற்றி எங்களுக்கு தெரியாது என தைலாபுரம் தோட்டம் வட்டாரம் மறுத்தாலும், அன்புமணி தரப்போ, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத விரக்தியில் அடுத்தகட்டமாக தற்போது புதிய கட்சி துவக்கத்தை கையில் எடுத்துள்ளனர். ஆனால் அதை தேர்தல் ஆணையம் உடனே ஏற்குமா? என்பது கேள்விக்குறிதான் என கூறியுள்ளது. தனது மகன் வேண்டுமானால் புதிய கட்சி தொடங்கி கொள்ளட்டும் என அவ்வப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிவந்த நிலையில், தற்போது தன்னையே புதிய கட்சி தொடங்கும் சூழலுக்கு மகன் தள்ளிவிட்டதால், வரும் தேர்தலிலே இதற்கு சரியான பதிலடி கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ராமதாஸ் தரப்பு கையில் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

* மீண்டும் ஒரு புதிய சின்னம்
1989ல் ராமதாஸால் தொடங்கப்பட்ட பாமக ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997ல் தகுதி பெற்றதாலும் யானை சின்னத்தை நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது. பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால் அங்கு மட்டும் யானை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதித்தது. அதன்பிறகு 1998ல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின்படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது. தற்போது பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு சின்னத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தெளிவான விளக்கம் அளித்துள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி பாமகவின் கொடி, சின்னம் அன்புமணியிடம் இருப்பதை கிட்டதிட்ட உறுதியாகி உள்ளது. இதனால் தனது தரப்பு தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு, மீண்டும் ஒரு புதிய சின்னத்தை பெறும் சூழல் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளது.

* புது கட்சி வழக்கு
பாமகவுக்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கோடு கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், பாமக தங்களுக்கு இல்லை என்ற நிலை வந்தால், அய்யா பாமக என்ற புதிய கட்சியை உடனே பதிய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். முதலில் உரிமை தொடர்பான வழக்கை விசாரித்ததால், புது கட்சி தொடர்பான வழக்கை நீதிமன்ற கையில் எடுக்கவில்லை. தற்போது, அன்புமணிக்கு சாதகமான நிலை வந்து உள்ளதால், அய்யா பாமக கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் தரப்பு மீண்டும் முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் ஆவணங்கள் முறையாக இல்லாததால், புது கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

* குடும்பத்துடன் அன்புமணி ஆன்மிக பயணம்: கருப்பண்ண சாமிக்கு அரிவாள் காணிக்கை; ராமதாசுடன் உறவு முடிஞ்சு போன கதை என பேட்டி
அன்புமணி தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று மதுரை வந்தார். நேற்று காலை அழகர்கோவில் கள்ளழகர் கோயில், நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயில், சோலைமலை முருகன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அவரது குடும்பத்தினரின் சார்பில் வேண்டுதல் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறியதால் கருப்பண்ணசாமிக்கு 11 அடி நீளமுள்ள அரிவாள் காணிக்கையாக செலுத்தப்பட்டது.

பாமக வழக்கில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதால், அரிவாள் காணிக்கையை அன்புமணி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டபோது, ‘‘ஆன்மீக சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் மதுரை வந்துள்ளோம். எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. நன்றாக புரிதல் உள்ள கூட்டணி. எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை. பிரச்னை கிடையாது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கும் இடையே தான் போட்டி’’ என்றார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், வெளியே வந்த அன்புமணியிடம், ராமதாசுடன் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அது முடிஞ்சு போன கதை என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

* பதில் சொல்றது எனக்கு அசிங்கம் – ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கூறுகையில், ‘‘கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும். முடிவு எடுப்போம். கூட்டணி தொடர்பாக, சில கட்சிகள் தொடர்பில் உள்ளனர். பேசிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை குறித்து கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார். ஜி.கே.மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் செய்து குறித்து கேட்டபோது, ‘‘இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்’’ என்றார்.

Tags : Ramadoss ,Anbumani ,PMK ,Delhi High Court ,
× RELATED திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ,...