×

5 லட்சியம் 3 நிச்சயம்; பாஜ போடும் கணக்கு

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க கோரி பட்டியல் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் பாஜ சிட்டிங் தொகுதி உள்பட 5 தொகுதிகளை கேட்டுள்ளது. இதில் 4 தொகுதிகள் அதிமுகவினரின் சிட்டிங் தொகுதிகள் என்பதால் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜ, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிடமிருந்து கேட்டு பெறுவதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் மேலும் 4 தொகுதிகளை குறிவைத்திருப்பது தான் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் பெரும்பான்மை சமுதாயமாக கொண்ட கவுண்டர், நாயுடு சமுதாய வாக்குகளை குறிவைத்து பாஜ பட்டியல் தயாரித்துள்ளது.

கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாய வாக்குகள் தீர்மான சக்தியாக உள்ளது. இந்த தொகுதிகளைதான் பாஜ.,வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. ஆனால் பாஜ கேட்கும் 5 தொகுதிகளில் சிட்டிங் தொகுதியை தவிர மீதமுள்ள 4 தொகுதிகளை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதிமுகவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 5 தொகுதிகளில் 2 மட்டும் குறைத்துக்கொண்டு 3 கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று பாஜ தரப்பில் கறாராக தெரிவித்துவிட்டாக கூறப்படுகின்றது. இதனால் கோவை அதிமுகவினர் பாஜ தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

* எடப்பாடி துரோகம் பண்ணிட்டாரு…3 முறை எம்எல்ஏ கதறல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் 50வது திண்ணை பிரசார விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 3 முறை எம்எல்ஏவாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு பேசுகையில், ‘உளுந்தூர்பேட்டையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது உளுந்தூர்பேட்டை தொகுதியில் சாலை வசதி, அரசு பள்ளி கட்டிடங்கள், அரசு அலுவலக புதிய கட்டிடங்கள், காவல் நிலைய கட்டிடங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்
படுத்தினேன்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமே கொண்டுவர முடியவில்லை. அன்று எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த அரசு கலைக்கல்லூரி ரிஷிவந்தியம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நான் கேட்டபோது ரிஷிவந்தியம் தொகுதி அதிக கிராமப்புறங்களை கொண்ட பகுதி. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அங்கு கல்லூரி அமைப்பதாக கூறினார். உளுந்தூர்பேட்டை ரோட்டிற்கு அருகில் உள்ளதால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக கலைக்கல்லூரி தருவேன் என அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதை நம்பி ஏமாந்து விட்டேன். கிராமப்புறத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதிக்கு கல்லூரி தந்ததை சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தோடு பார் என கூறினார். அதனால் நான் அமைதியாக இருந்து விட்டேன், இவ்வாறு பேசினார்.

Tags : BJP ,AIADMK ,National Democratic Alliance ,Tamil Nadu ,Coimbatore district ,
× RELATED திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ,...