×

நாமக்கல்லில் 6-ல் 3 பாஜ, பாமக ‘ஸ்கெட்ச்’: விடாமல் மோதும் அதிமுக

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், குமாரபாளையம் என்று 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் நாமக்கல், ராசிபுரம் (தனி), திருச்செங்கோடு, சேந்தமங்கலம் (எஸ்டி) தொகுதிகள் தற்போது திமுக மற்றும் கூட்டணி வசம் உள்ளது. குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, பரமத்திவேலூர் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சேகர் ஆகியோர் உள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் தனக்கு மிகவும் ராசியான மாவட்டம் நாமக்கல் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சிலாகித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ 2 தொகுதிகளையும், அன்புமணி பாமக 1 தொகுதியையும் குறிவைத்து காய்நகர்த்தி வருகிறது. பாஜவின் மாநில துணைத்தலைவர்களே இந்த தொகுதிகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்த கே.பி.ராமலிங்கம், பின்னர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, பாஜவில் இணைந்த அவருக்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல் திமுகவில் துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த வி.பி.துரைசாமியும் பாஜவில் இணைந்தார். இவருக்கும் தற்போது பாஜவில் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இருவரும் தற்போது தனக்காகவும், வாரிசுக்காகவும் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வருகின்றனர்.

இதில் வி.பி.துரைசாமி ராசிபுரத்தில் மகனை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கே.பி.ராமலிங்கம் திருச்செங்கோட்டில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சியின் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இருவரும் தொடர்ந்து பேசி வருவதாக உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வி.பி.துரைசாமி ஏற்கனவே 2முறை ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் தோல்வி அடைந்தார். இதனால் இந்தமுறை அதிமுக கூட்டணியில் சீட்டு வாங்கி, மகனை நிறுத்த வேண்டும் என்பது அவரது தற்போதைய அரசியல் செயல்திட்டங்களில் முதலிடத்தில் உள்ளது.

இப்படி இவர்கள் இருவரும் காய்நகர்த்தி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பாமகவும் தனது பங்கிற்கு ஒரு தொகுதியை குறிவைத்து காய்நகர்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முந்தைய காலங்களில் பிரசித்தி பெற்ற தொகுதிகளில் ஒன்றாக இருந்தது கபிலர்மலை. இந்த தொகுதியானது, மறுசீரமைப்பில் பரமத்திவேலூர் என்று பெயர் மாற்றம் கண்டது. இங்கு ஒரு முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக வெற்றி பெற்றது. இதை கவனத்தில் கொண்டு, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி பாமக நிர்வாகிகளும் காய்நகர்த்தி வருகின்றனர். கொங்கு மண்டலமாக இருந்தாலும் தங்களது ஆதிக்கமும் இருக்க வேண்டும் என்ற ரீதியில் அன்புமணி பாமகவினர் பரமத்திவேலூரை குறிவைத்து வலம் வருகின்றனர். இப்படி 6ல் மூன்று தொகுதிக்கு கூட்டணியில் உள்ள பாஜவும், பாமகவும் காய்நகர்த்தும் நிலையில், தனது கட்சியினரை எப்படி சமாளிப்பது என்று பெரும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி.

இதுகுறித்து உள்ளூர் அதிமுகவினர் கூறுகையில், ‘‘நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுகவினர் தயார் நிலையில் உள்ளனர். இதில் குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும், ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் அதிக ஆர்வமாக உள்ளனர். நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், தயாராக உள்ளார். சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

திருச்செங்கோட்டில் ஏற்கனவே வெற்றி பெற்ற எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் பொன்சரஸ்வதி போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அதிமுக வசம் உள்ள பரமத்திவேலூர் தொகுதியை விட்டுக்கொடுக்கவும் கட்சியின் மூத்தநிர்வாகிகள் தயாராக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கூட்டணி என்ற பெயரில் பாஜவின் மாநில துணைத்தலைவர்களும், அன்புமணி பாமகவினரும் குழப்பாமல் இருப்பது நல்லது. இவர்கள் திட்டமிட்டு காய்நகர்த்துவதால் தேர்தல் பணிகளில் அதிமுகவினர் ஆர்வம் காட்டாத நிலையே உருவாகும். இவ்வாறு மூத்த நிர்வாகிகள் கூறினர்.

Tags : BJP ,PMK ,Namakkal ,AIADMK ,Thiruchengode ,Rasipuram ,Paramathivellur ,Senthamangalam ,Kumarapalayam ,ST ,DMK ,MLA… ,
× RELATED திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ,...