×

‘துரோகி, முதுகில் குத்திட்டாரு, ஏரியாக்குள்ள வர முடியாது’: போன தேர்தல்ல எதிரி இந்த தேர்தல்ல நண்பன்; அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை என்பது போல தான், தற்போது அதிமுக கூட்டணி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜ கூட்டணி கட்சியான புதியநீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பசுபதி போட்டியிட்டார். அப்போது நடந்த பிரசாரத்தின்போது, ஏ.சி.சண்முகம் அதிமுக மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் செல்லும் இடங்களில் எல்லாம், பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

அதாவது, கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்லின்போது பாஜ கூட்டணியில் இடம் பிடித்து அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஏசி சண்முகம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி தான். சிலருடன் கைகோர்த்துக் கொண்டு உள்ளடி வேலைகள் செய்து என்னைத் தோற்கடித்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால், இப்போது நான் அவர்கள் முதுகில் குத்தியதாகக் கூறுகின்றனர். அதிமுகவினர் தான் என்னைப் பழிவாங்க, முதுகில் குத்தி கடந்த தேர்தலில் என்னைத் தோற்கடித்தார்கள். இது என் மானப்பிரச்னை. என் முதுகில் குத்தியவர்களை நாம் மார்பில் குத்த வேண்டும் என்று ஏசி சண்முகம் பரபரப்பாக பேசினார்.

அதற்கு பதிலடி கொடுத்து அதிமுக மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், ‘கடந்த தேர்தல் தோல்விக்கு நானும், அதிமுகவினரும்தான் காரணம் என்று பாஜ கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம். பிரசாரத்துக்கு வரும்போது, எங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்துக்கு ஆளாவீர்கள். தொண்டன் மீது பழி சுமத்துவது, என்மீது வீண்பழி சுமத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இனியும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டால், தொகுதிக்குள்ளேயே நுழைய முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பை நீங்கள் சந்திக்க நேரிடும். ஜெயலலிதா இருந்த வரை, அதிமுக பக்கமே உங்களைத் திரும்பவிடாமல் ஒதுக்கியே வைத்திருந்தார். அதிமுகவின் துரோகி நீங்கள். இன்றைக்கு எங்களைப் பார்த்து இரட்டை இலைக்கு துரோகம் செய்கிறோம்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்’ என கொந்தளித்தார் கே.சி.வீரமணி.

இப்படி இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் மீண்டும் ஏ.சி.சண்முகம் வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் அவர் போட்டியிட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இரு கட்சி தொண்டர்கள் மற்றும் பாஜவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலின்போது அதிமுகவின் துரோகி ஏ.சி.சண்முகம் என்று மாஜி அமைச்சர் வீரமணி பேச, முதுகில் குத்திவிட்டார் வீரமணி என்று ஏ.சி.சண்முகம் பேச, அதிமுக தொண்டர்கள் கொதிச்சு போயிருந்தாங்க. இப்ப கூட்டணியில சேர்ந்துட்டு, அதுபோன தேர்தல், இப்ப நாங்க கூட்டணி என்று சொல்கிறார்களாம். உயர்மட்ட நிர்வாகிகளோ, அரசியல்ல இதலெ்லாம் சகஜமப்பான்னு தட்டிவிட்டு தயாராகி வர்றாங்களாம்.

* என்னாது எடப்பாடிக்கா? அலறிய ஜோசியர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மனைவியுடன் திருப்பூரை சேர்ந்த தென்னரசு (எ) ரிஷியானந்தாவிடம் ஜோசியம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், ‘‘கன்னி ராசியில் பிறந்த எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது புதன் திசை நடக்கிறது. சூரியனும், வலுவுடன் பயணிப்பதால் தனித்திறனுடன் செயல்படுவீர்கள். ராஜயோகம் உள்ளதால் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகும் யோகம் உள்ளது. இதற்காக நீங்க யாகம் நடத்த வேண்டும்’’ என்று கூறியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில்தான், நான் இதுபோன்று கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, எடப்பாடி பழனிசாமியை, நான் இதுவரை சந்தித்ததே இல்லை என்று ஜோதிடர் ரிஷியானந்தா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘என்னிடம் அரசியல் பாகுபாடு இன்றி பலர் வருகிறார்கள். நான் அவர்களுக்கு தேவையான யோசனைகளை தெரிவிக்கிறேன். மக்கள் மத்தியில் இதுபோன்ற தகவலை கொண்டு போகும்போது வேறு மாதிரி பார்ப்பார்கள். அதே நேரத்தில் எனது பாலோயர்களிடம் தவறான கருத்துகளை பரப்பும் முயற்சியை சிலர் செய்கிறார்கள். இது, மக்களை திசை திருப்பும் முயற்சி. ஒருசிலரை பழிவாங்க இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : AIADMK ,New Justice Party ,BJP ,Vellore Lok Sabha ,A.C. ,Shanmugam… ,
× RELATED திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ,...