1. தவெக-நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே அடிக்கடி நடக்கும் மோதல் குறித்து?
அப்படி ஒரு நோக்கம் தவெக தம்பிகளிடத்தில் இல்லை. தலைமை இடத்திலும் இல்லை. நாம் தமிழர் கட்சியை ஒரு கட்சியாக கருதுகிற இடத்திலும் நாங்கள் இல்லை. நாங்கள் உயரத்தில் இருக்கிறோம். அவர்கள் பள்ளத்தில் இருக்கிறார்கள். விஜய் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் நாம் தமிழர் கட்சி சமாதியாகிவிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் ஒரு மாயையான இடத்துக்கு சென்று விட்டோம் என்று, இப்போழுது அவர்களுக்கு ஏற்ற தலைவன் விஜய் தான் என்று எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆத்திரத்தில் சில வன்முறை சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். திரும்பி தாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. தேர்தல் முடியும் வரை நாம் தமிழர் கட்சி இருக்குமா என்பது கேள்வி குறி. அந்த திசையை நோக்கி நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம்.
2. விஜய்யை ஊழல்வாதி என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரே?
26 இடங்களில் ரெய்டு வந்த பிறகு தான் பாஜவோடு எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி கொண்டார். எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்தில் இருக்கிற தம்பி துரையின் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு இருக்கிறது. கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட இவர்கள் மீதெலெல்லாம் வழக்கு இருக்கிறது. இப்படி வழக்குகளை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்த ஒரு கொள்ளை கூட்டம் எங்கள் தலைவர் விஜய் மீது குற்றம்சாட்டுகிறது என்றால், குற்றம்சாட்டுவதற்கான தகுதி கூட அவர்களுக்கு கிடையாது. எனவே, எங்கள் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டை தெரிவிக்க முடியாது. எங்கள் மாவட்ட செயலாளர்களாக இருக்கிற தம்பிகள் எல்லாம் வயதில் மட்டும் இளைஞர்கள் அல்ல, செல்வத்திலும் இழைத்தவர்கள். ஒரு ஏழை தொண்டர்களை நம்பி ஒரு மாற்றத்துக்கான அரசியல், அதையும் தாண்டி ஆட்சி மாற்றத்துக்கான அரசியல் செய்வதில் அவர் வெற்றி பெற்று விட்டார். இப்போது திமுகவுக்கும், தவெவுக்கும் இடையே தான் போட்டி. 22 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்த அதிமுக, இன்று எங்கள் முன்னால் நிற்க முடியவில்லை. அவர்கள் களத்திலும் இல்லை. ஆகவே ஆத்திரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். அதற்கு அவர் சோடா வாங்கி குடிப்பது நல்லது.
3. சசிகலா, தவெக கூட்டணியில் இணைவதாக தகவல் பரவுகிறதே?
எனக்கு அப்படி ஒரு தகவல் தெரியவில்லை. அப்படி இருந்தாலும் தலைவர் தான் சொல்வார். அவர் தான் அது பற்றி முடிவெடுப்பார். எனக்கு தெரியாது.
4. பாஜ-தவெக இடையே ஒரு ரகசிய கூட்டணி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறித்து?
பாஜகவுக்கும், தவெகவுக்கு இடையே அப்படி ஒரு கூட்டணி இருந்திருந்தால் ஜனநாயகன் வந்திருப்பான். ஜனநாயகனை தடை செய்த போதே அப்படி ஒரு கூட்டணி இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ஆகவே தவெகவை சிறுமைபடுத்துவதற்கு கட்டவிழ்த்து விடுகிற பொய் பிரசாரம் இது. அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜவையும் விஜய் அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்ல, செங்கோட்டையன் நடத்திய விஜயமங்கலம் கூட்டத்தில் எங்கள் தலைவரே கோஷம் போட்டார். கொள்கை எதிரி என வானம் அதிர முழங்கினார், லட்சக்கணக்கான தொண்டர்கள் பாஜ என்று முழங்கினார்கள். எனவே திரண்டிருந்த மக்கள் மத்தியிலேயே நாங்கள் அதை பதிவு செய்த பின்பு இப்படி ஒரு சந்தேகத்தை அவர்கள் கிளப்புகிறார்கள் என்றார் அவர்கள் இன்னும் இருட்டறையில் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
