லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வரும் உபியில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்த தேர்தலுக்கு முந்தைய, பாஜ அரசின் 2026-27ம் ஆண்டுக்கான கடைசி முழு பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா நேற்று பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசியதாவது: பட்ஜெட்டுக்கு ரூ.9.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முந்தைய பட்ஜெட்டை விட சுமார் 12.2 சதவீதம் அதிகம்.இது மாநிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட். மொத்த பட்ஜெட்டில் மூலதனச் செலவு 19.5 சதவீதம். 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை வரம்பு மூன்று சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடுகள் மொத்த பட்ஜெட்டில் முறையே 12.4 சதவீதம் மற்றும் ஆறு சதவீதமாக இருந்தன. இவ்வாறு அவர் பேசினார்.
* அயோத்திக்கு ரூ.150 கோடி
உபி மாநில பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குதல், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு,தொழில் வளர்ச்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகளுக்காக அரசு ரூ.43,565 கோடி ஒதுக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
