பேப்பர் திருடி கம்பி எண்ணும் புதுச்சேரி வேட்பாளர்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகிற 9ம்தேதி நடக்கிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) வாக்காளர் வண்ண புகைப்படம் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தும் பணியும், ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவி பாட்) சரிபார்க்கும் பணியும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த பணிகள் வாக்கு எண்ணும் மையங்களான லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி, அரசு மகளிர் இன்ஜினீயரிங் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

இவற்றை வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கலந்துகொண்டு பார்வையிடலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலியார்பேட்டை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் விவரம் ஒட்டும் பணி நடந்தது. இதில் முதலியார்பேட்டையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளரான வேல்ராம்பேட் இன்ஜினீயர்ஸ் காலனியை சேர்ந்த சுத்தம்சுந்தர்ராஜன் என்ற ரவீந்திரன் (60) பார்வையிட நேற்று முன்தினம் மாலை வந்தார்.

அப்போது அங்குள்ள விவிபாட் இயந்திரத்தில் வைக்க கொண்டு வந்த ஒப்புகை சீட்டு பண்டல் மாயமாகி இருந்தது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்படவே, தேர்தல்துறை உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், துணை ராணுவத்தினர் அனைவரும் விரைந்து வந்தனர். உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒப்புகைசீட்டு பண்டலை சுயேச்சை வேட்பாளரான சுத்தம் சுந்தர்ராஜன் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்த பண்டலை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், அவரை லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்தனர். இதையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135-ன் படியும் மற்றும் திருட்டு வழக்கிலும் சுத்தம் சுந்தர்ராஜனை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனால், தற்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட வேண்டிய அவர் சிறையில் கம்பி எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: