இளங்கலை, முதுகலை பட்டங்களை வழங்க அதிகாரம் என்சிஇஆர்டிக்கு நிகர்நிலை பல்கலை கழக அந்தஸ்து

புதுடெல்லி: என்சிஇஆர்டிக்கு பட்டங்களை அளிக்கும் அதிகாரம் கொண்ட நிகர்நிலை பல்கலை கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் பல்கலை கழகங்களுடன் இணைக்கப்பட்டு பட்டங்களை வழங்கி வந்தன. இந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த 2023ம் ஆண்டு, என்சிஇஆர்டிக்கு நிகர்நிலை பல்கலை கழக அந்தஸ்தை வழங்கியது.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கான பிரிவின்கீழ் இத்தகைய அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது. இனி என்சிஇஆர்டி தனது சொந்த கல்வி திட்டங்களை வடிவமைத்து, பாடத்திட்டங்களை உருவாக்கி, பட்டங்களை வழங்க முடியும். அதன்படி இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்க என்சிஇஆர்டி தற்போது தகுதி பெற்றுள்ளது.

இந்த அந்தஸ்தானது என்சிஇஆர்டியின் கீழுள்ள ஆறு பிராந்திய கல்வி நிறுவனங்களுக்கும்(Regional Institutes Education RIEs) மற்றும் அஜ்மீர், போபால், புவனேஷ்வர், மைசூர் மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இவை உள்ளூர் பல்கலை கழகங்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. மேம்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் பள்ளி கல்வி ஆராய்ச்சிகளுக்கு இந்த நடவடிக்கை உதவும் என கருதப்படுகிறது. அத்துடன், என்சிஇஆர்டி தேசிய மற்றும் சர்வதேச பல்கலை கழகங்களுடன் இணைந்து கல்வி செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

Related Stories: